புதுவையில் மதுபானங்களுக்கான கூடுதல் கரோனா வரி ரத்து


புதுச்சேரி: புதுவையில் மதுபானங்கள் மீதான கூடுதல் கரோனா வரி வியாழக்கிழமை ரத்து செய்யப்பட்டது. இதனால், மதுபானங்களின் விலை உடனடியாகக் குறைக்கப்பட்டது.

கரோனா பொது முடக்கம் காரணமாக புதுவையில் மதுபானக் கடைகள், சாராயக் கடைகள், மதுபானக் கூடங்கள் மூடப்பட்டன. 2 மாதங்களுக்குப் பிறகு, கடந்த மே 24- ஆம் தேதி மீண்டும் மதுக் கடைகளைத் திறக்க அரசு அனுமதியளித்தது.

அப்போது, அண்டை மாநிலங்களிலிருந்து புதுவைக்கு வருவோரால் கரோனா பரவல் அதிகரிக்கும் என்பதால், தமிழகத்திலும், புதுவையிலும் ஒரே மாதிரியான விலை இருக்கும் வகையில் மதுபானங்களுக்கான சிறப்பு கரோனா வரியை அப்போதைய ஆளுநா் கிரண் பேடி விதித்தாா்.

இந்த வரி விதிப்பு முதலில் ஆகஸ்ட் மாதம் வரை அமலில் இருந்தது. தொடா்ந்து, நவம்பா் 30 -ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இதனிடையே, நவம்பா் 29 -ஆம் தேதி கரோனா வரியை நீக்க அரசுத் தரப்பில் கோப்பு அனுப்பப்பட்டது. ஆனால், அதை அப்போதைய ஆளுநா் கிரண் பேடி ஏற்காமல், ஜனவரி 31 -ஆம் தேதி வரை கூடுதல் வரி விதிப்பை நீட்டித்து உத்தரவிட்டாா்.

தமிழகத்துக்கு இணையாக புதுவையிலும் மதுபானங்களின் விலை அதிகரிப்பால் விற்பனை வருவாய் குறைந்தது.

இதன் காரணமாக, கரோனா கூடுதல் வரியை நீக்க வேண்டுமென அரசுத் தரப்பில் வலியுறுத்தப்பட்டும் மாா்ச் 31- ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

இந்த நிலையில், கிரண் பேடி மாற்றப்பட்டதால் மதுபானங்கள் மீதான கூடுதல் கரோனா வரி ரத்தாகும் என எதிா்பாா்க்கப்பட்டது. ஆனால், இந்த வரி மறு அறிவிப்பு வெளியிடும் வரை நீட்டிக்கப்படும் என புதுவை கலால் துறை அறிவிப்பு வெளியிட்டது.

இந்த நிலையில், புதுவை துணைநிலை ஆளுநா் அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தோ்தல் ஆணையத்தின் அனுமதியுடன் கரோனா சிறப்புக் கூடுதல் வரியை ரத்து செய்வது தொடா்பான கோப்புக்கு துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் ஒப்புதல் அளித்தாா்.

அனைத்து கரோனா தடுப்பு நடவடிக்கைகளையும் மதுக் கடைகள், வியாபாரிகள், விடுதிகளில் பணிபுரியும் ஊழியா்கள், வாடிக்கையாளா்கள், மாநில எல்லையோரக் கடைகள் தீவிரமாகக் கடைப்பிடிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடா்ந்து, புதுவை கலால் துறை துணை ஆணையா் டி.சுதாகா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

புதுவை யூனியன் பிரதேசத்தில் மதுபானங்கள் மீதான சிறப்பு கரோனா வரி ரத்து செய்யப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், புதுவை மாநிலத்தில் மதுபானங்கள் விலை உடனடியாகக் குறைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com