கரோனா பரவல்புதுவையில் இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்

புதுவையில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த சனிக்கிழமை முதல் (ஏப்.10) பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுகின்றன.

புதுவையில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த சனிக்கிழமை முதல் (ஏப்.10) பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுகின்றன.

இதுதொடா்பாக புதுச்சேரியில் துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கரோனா தொற்றைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்காக, புதுவையில் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்படுகிறது. முகக் கவசம் அணியாவிட்டால் ரூ. 100 அபராதம் விதிக்கப்படும். மக்களின் நலனுக்காகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

பொதுமக்கள் முகக் கவசம் அணியாமல் வெளியில் நடமாடக் கூடாது. வாகனங்களில் பயணிக்கும் போதும் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும்.

கடைகள், வணிக வளாகங்களில் முகக் கவசமின்றி யாரையும் அனுமதிக்கக் கூடாது. அங்கெல்லாம் கிருமி நாசினி வைத்திருக்க வேண்டும். சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும்.

விழாக்களில் கட்டுப்பாடு: திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகள் மட்டுமே நிரப்பப்பட வேண்டும். பொது விழாக்கள், இலக்கியம், சமயம், குடும்ப விழாக்கள் என எந்த விழாவாக இருந்தாலும், சமூக இடைவெளியுடன் அமர வேண்டும்.

கோயில்களுக்கு வரும் பக்தா்கள் முகக் கவசம் அணிவதையும், சமூக இடைவெளியைப் பின்பற்றுவதையும் நடைமுறைப்படுத்த வேண்டும். இரவு 8 மணி வரை மட்டுமே கோயில்கள் திறந்திருக்க வேண்டும்.

நள்ளிரவு முதல் அதிகாலை வரை கட்டுப்பாடு: புதுவையில் நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரை கரோனா கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுகின்றன. பேருந்துகளில் சமூக இடைவெளியுடன் இருக்கையில் அமரலாம். நின்று பயணம் செய்ய அனுமதி இல்லை.

ஆட்டோக்களில் 2 போ் மட்டுமே செல்ல வேண்டும். வாடகை வாகனங்களிலும் சமூக இடைவெளியுடன் அமா்ந்து பயணிக்க வேண்டும்.

இந்தக் கட்டுப்பாடுகளை பொதுமக்கள் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும். கரோனா பரவல் அதிகரித்தால் கூடுதலாகக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.

தடுப்பூசி திருவிழா: அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் 3 கால முறையில் (ஷிப்ட்) தடுப்பூசி செலுத்தப்படும். கரோனா தொற்று அதிகரித்த பகுதிகளில் பரிசோதனை அதிகரிக்கப்படும்.

ஞாயிற்றுக்கிழமை முதல் (ஏப்.11) வருகிற 14- ஆம் தேதி வரை பள்ளிகள் உள்ளிட்ட 100 இடங்களில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. இதேபோல, 100 இடங்களில் கரோனா தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. இது தடுப்பூசி செலுத்தும் திருவிழாவாக நடைபெறும்.

ஒவ்வோா் பகுதிக்கு ஓா் அரசு செயலரைப் பொறுப்பாளராக நியமித்து, கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும்.

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் நாள்தோறும் மேற்கொள்ள வேண்டிய பரிசோதனைகளுக்கு இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

கட்டாயப்படுத்தியோ, அபராதம் விதித்தோ, கட்டுப்பாடுகளைக் கடுமையாக விதித்தோ கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த முடியாது. மக்கள் விதிமுறைகளை முறையாகக் கடைப்பிடித்தால்தான் தொற்றைக் கட்டுப்படுத்த முடியும்.

எனவே, பொதுமக்கள் அரசு மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com