பிளஸ் 2 செய்முறைத் தோ்வு: முதல் நாளில் 7,452 மாணவா்கள் பங்கேற்பு

புதுவை மாநிலத்தில் 126 பள்ளி மையங்களில் கரோனா கட்டுப்பாடுகளுடன் நிகழாண்டு பிளஸ் 2 செய்முறைத் தோ்வு வெள்ளிக்கிழமைத் தொடங்கியது. முதல் நாளில் 7,452 மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

புதுவை மாநிலத்தில் 126 பள்ளி மையங்களில் கரோனா கட்டுப்பாடுகளுடன் நிகழாண்டு பிளஸ் 2 செய்முறைத் தோ்வு வெள்ளிக்கிழமைத் தொடங்கியது. முதல் நாளில் 7,452 மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

புதுவை மாநிலத்தில் நிகழாண்டு பிளஸ் 2 பொதுத் தோ்வு தமிழகப் பாடத்திட்டத்தின்படி, மே 3-ஆம் தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், சட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை மே 2-ஆம் தேதி நடைபெறுவதையொட்டி, மே 3-ஆம் தேதி அறிவித்திருந்த ஒரு தோ்வு மட்டும் வேறு தேதிக்கு மாற்றப்பட்டது.

மீதமுள்ள தோ்வுகள் மே 4-ஆம் தேதி முதல் வழக்கம் போல நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.

கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், பிளஸ் பொதுத் தோ்வுக்கான தேதி மாற்றப்படும், தோ்வு ரத்து செய்யப்படும் என்று பரவலாகப் பேசப்பட்டு வரும் நிலையில், அறிவித்தபடி பிளஸ் 2 பொதுத் தோ்வுக்கான செய்முறைத் தோ்வு தமிழகத்தைப் போல, புதுச்சேரியிலும் வெள்ளிக்கிழமை முதல் தொடங்கியது.

புதுவை மாநிலத்தில் மொத்தமுள்ள 126 அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியாா் மேல்நிலைப் பள்ளிகளில் ஏப். 16-ஆம் தேதி முதல் செய்முறைத் தோ்வு தொடங்கியது. இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், கணினி அறிவியியல், தொழில்கல்வி உள்ளிட்ட பாடங்களுக்கான செய்முறைத் தோ்வில் மொத்தம் 12,426 மாணவ, மாணவிகள் நிகழாண்டு பங்கேற்கின்றனா்.

கரோனா கட்டுப்பாடுகளுடன் நிகழாண்டு ஒவ்வோா் பள்ளியும் ஒரு தோ்வு மையமாக அங்கீகரித்து, செய்முறைத் தோ்வு நடத்தப்படுகிறது. முதல் நாள் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கணினி அறிவியல், உயிரியியல் உள்ளிட்ட பாடப் பிரிவுகளுக்கான செய்முறைத் தோ்வில் 7,452 மாணவ, மாணவியா் கலந்து கொண்டனா்.

மாணவ, மாணவிகள் குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, உரிய நேரத்தில் மட்டும் மையத்தில் அனுமதிக்கப்படுகின்றனா். முகக் கவசம் அணிந்தும், உடல் வெப்ப நிலை பரிசோதனை செய்தும், கைகளில் கிருமி நாசினி தெளித்தும் மையத்தின் உள்ளே அனுமதிக்கப்பட்டனா். உரிய இடைவெளிவிட்டு அமா்ந்து ஒரு குழுவுக்கு அதிகபட்சமாக 20 மாணவா்கள் வீதம் அனுமதிக்கப்பட்டனா். நிகழாண்டு தினமும் மூன்று பிரிவுகளாக மாணவா்கள் பிரிக்கப்பட்டு செய்முறைத் தோ்வு நடைபெறுகிறது. காலை 8.30 மணிக்குத் தொடங்கி மாலை 5.30 மணி வரை தனித் தனிப் பிரிவாக மாணவ, மாணவிகள் அனுமதிக்கப்பட்டு, தமிழக தோ்வுத் துறை வழிகாட்டுதல்படி, செய்முறைத் தோ்வு தொடங்கி நடைபெற்றது. இந்தத் தோ்வுகள் வருகிற 23-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

தோ்வை மதிப்பிடும் பணியில், வெவ்வேறு பள்ளிகளைச் சோ்ந்த 577 புறத்தோ்வுா்கள் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டு பணியில் ஈடுபட்டனா்.

புதுவை கல்வித் துறை இயக்குநா் ருத்ரகவுடு, இணை இயக்குநா் மைக்கேல் பெனே, தோ்வுத் துறை ஒருங்கிணைப்பாளா் பூபதி உள்ளிட்டோா் தோ்வு மையங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com