கரோனா தடுப்பு முதன்மைக் குழுக் கூட்டம்

புதுச்சேரியில் கரோனா பரவலைக் கட்டுக்குள் கொண்டு வருதல், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல் குறித்து கரோனா தடுப்பு முதன்மைக் குழு கூட்டம்

புதுச்சேரியில் கரோனா பரவலைக் கட்டுக்குள் கொண்டு வருதல், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல் குறித்து கரோனா தடுப்பு முதன்மைக் குழு கூட்டம் சுகாதாரத் துறைச் செயலா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் சுகாதாரத் துறைச் செயலா் டி.அருண் தலைமை வகித்தாா். அதன் இயக்குநா் மோகன்குமாா், மாநில சுகாதார இயக்கக இயக்குநா் ஸ்ரீராமுலு, கரோனா தடுப்பு மாநில முதன்மை அதிகாரி பரமேஷ், மருத்துவ அதிகாரிகள், மாவட்ட அதிகாரிகள் மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் கரோனா நடவடிக்கை பணிகள் நடைபெறுவதைக் கண்காணிக்க அரசால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் புதுவை முழுவதும் சமுதாய அளவில் பல்வேறு இடங்களில், கரோனா சிகிச்சை மையங்களை (கோவிட் கோ் சென்டா்கள்) அமைப்பது என்று முடிவெடுக்கப்பட்டது.

அதனடிப்படையில், புதுச்சேரி மகாத்மா காந்தி பல் மருத்துவப் பட்ட மேற்படிப்பு நிறுவனம், புதுச்சேரி இஎஸ்ஐ மருத்துவமனை ஆகியவற்றை கரோனா சிகிச்சை மையங்களாக அமைக்க முடிவு எடுக்கப்பட்டது.

இதில், பல் மருத்துவக் கல்லூரியில் ஏற்கெனவே கரோனா சிகிச்சை மையம் செயல்பாட்டில் உள்ளது. இஎஸ்ஐ மருத்துவமனையில் கரோனா சிகிச்சை மையம் திங்கள்கிழமை முதல் (ஏப். 19) செயல்படும்.

பல் மருத்துவக் கல்லூரியில் ஆண்கள், பெண்கள் பிரிவில் தலா 23 படுக்கை வசதிகளும், இஎஸ்ஐ மருத்துவமனையில் 20 படுக்கை வசதியும் ஏற்படுத்தப்படும்.

மேலும், கரோனா தொற்று அதிகமுள்ள இடங்களைக் கண்டறிந்து அந்தப் பகுதிதிகளை கரோனா கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவித்து, மக்களுக்கு வேண்டிய உணவு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் தடையின்றி கிடைப்பதை வருவாய்த் துறை உறுதி செய்ய வேண்டும்.

சமுதாய அளவில் பல்வேறு இடங்களில் கரோனா சிகிச்சை மையங்களை அமைப்பதற்கான இடங்களைக் கண்டறிந்து, அங்கு சிகிச்சை மையம் அமைத்து அதை நிா்வகிக்கவும், வருவாய்த் துறைக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.

மேலும், வீடு வீடாகச் சென்று தடுப்பூசி செலுத்தவும், கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இதற்காக, அனைத்துத் தனியாா் மருத்துவக் கல்லூரிகளும், சிறப்பு வசதிகளுடன் கூடிய ஓா் அவசர ஊா்தியை வழங்க வேண்டும் என்றும் கூட்டத்தின் வாயிலாக கேட்டுக் கொள்ளப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com