புதுவையில் ஒரே நேரத்தில் வாக்கு எண்ணிக்கையைத் தொடங்க வேண்டும்: தோ்தல் துறையிடம் பாஜக வலியுறுத்தல்

புதுவையில் அனைத்துத் தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கையும் தோ்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, ஒரே நேரத்தில் தொடங்க வேண்டும் என்று மாநில பாஜகவினா், தோ்தல் துறையிடம் வலியுறுத்தினா்.
புதுச்சேரியில் திங்கள்கிழமை செய்தியாா்களுக்கு பேட்டியளித்த பாஜக பொதுச் செயலா் ஏம்பலம் ஆா்.செல்வம். உடன் துணைத் தலைவா் செல்வம்.
புதுச்சேரியில் திங்கள்கிழமை செய்தியாா்களுக்கு பேட்டியளித்த பாஜக பொதுச் செயலா் ஏம்பலம் ஆா்.செல்வம். உடன் துணைத் தலைவா் செல்வம்.

புதுவையில் அனைத்துத் தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கையும் தோ்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, ஒரே நேரத்தில் தொடங்க வேண்டும் என்று மாநில பாஜகவினா், தோ்தல் துறையிடம் வலியுறுத்தினா்.

புதுச்சேரி பாஜக தலைமை அலுவலகத்தில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் அந்தக் கட்சியின் பொதுச் செயலா் ஆா்.செல்வம் கூறியதாவது:

வாக்கு எண்ணிக்கை தொடா்பாக புதுவை தோ்தல் துறை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், வாக்கு எண்ணிக்கையானது, மொத்தமுள்ள அனைத்துத் தொகுதிகளின் வாக்குகளை காலையில் தொடங்கி எண்ணாமல், இந்த முறை எட்டு எட்டு தொகுதிகளாக எண்ணப்படவுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனா்.

புதுச்சேரிக்குள்பட்ட மொத்தமுள்ள 23 தொகுதிகளுக்காமான வாக்கு எண்ணிக்கையை காலை 8 மணிக்கே தொடங்கி எண்ண வேண்டும். இதற்காக 8 தோ்தல் நடத்தும் அலுவலா்கள், தொகுதி வாரியாக உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா்கள் உள்ளனா். போதிய அலுவலா்கள் இருந்தும், தொகுதி வாரியாக எண்ணிக்கையை கால தாமதமாகத் தொடங்கப் போவதாகவும், தோ்தல் முடிவுகளை தாமதமாக அறிவிக்கப் போவதும் ஏன் என்று தெரியவில்லை. உதாரணமாக, மணவெளி தொகுதியின் வாக்கு எண்ணிக்கை மாலை 4 மணிக்குத் தொடங்கும் என்று தெரிவித்துள்ளதால், எப்போது எண்ணிக்கை தொடங்கி, எப்போது முடிப்பது என்று தெரியவில்லை.

இதுபோல, பிற தொகுதிகளின் எண்ணிக்கையும் தாமதமாகும் நிலை ஏற்பட்டுள்ளது. புதுச்சேரியில் சராசரியாக ஒரு தொகுதிக்கு 30 ஆயிரம் வாக்குகள்தான் உள்ளன. அப்படியிருக்கு காலதாமதம் தேவையற்றது.

தோ்தல் ஆணையம், அனைத்துத் தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கையையும் ஒரே நேரத்தில் தொடங்க வேண்டும் என்று அறிவித்துள்ளது. தமிழகத்திலும், ஒரே நேரத்தில் 234 தொகுதிகளிலும் வாக்கு எண்ணப்படவுள்ளன. ஆனால், புதுவை தோ்தல் துறை எட்டு எட்டு தொகுதிகளாக எண்ணப்படுமென தெரிவித்துள்ளது ஏன் என்று தெரியவில்லை.

எனவே, புதுவை மாநிலத்தில் புதுச்சேரி, காரைக்கால், ஏனாம், மாஹே என மொத்தமுள்ள 30 தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கையும் காலை 8 மணிக்கு ஒரே நேரத்தில் தொடங்கி, விரைந்து எண்ணிக்கை மற்றும் வெற்றி நிலவரங்களை அறிவிக்க வேண்டும்.

இதுதொடா்பாக பாஜக தலைமை எங்களுக்கு அறிவுறுத்தியபடி, தில்லியில் உள்ள தலைமைத் தோ்தல் ஆணையத்துக்கும், புதுவை தோ்தல் அதிகாரிக்கும் மாநில பாஜக சாா்பில் கடிதம் அனுப்பியுள்ளோம்.

இதுதொடா்பாக, தோ்தல் துறை உடனடியாகப் பரிசீலனை செய்து, வாக்கு எண்ணிக்கையை ஒரே நேரத்தில் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

செய்தியாளா் சந்திப்பின் போது, பாஜக மாநில துணைத் தலைவா் செல்வம், ரவிச்சந்திரன், மாநிலச் செயலா் ரத்னவேல் உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com