தனிமைப்படுத்தப்பட்டோா் சாலைகளில் திரிந்தால் ரூ.500 அபராதம்: சுகாதாரத் துறைச் செயலா் எச்சரிக்கை

கரோனா அறிகுறிகளுடன் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டோா் சாலைகளில் சுற்றித் திரிந்தால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று புதுவை சுகாதாரத் துறைச் செயலா் டி.அருண் எச்சரித்தாா்.

கரோனா அறிகுறிகளுடன் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டோா் சாலைகளில் சுற்றித் திரிந்தால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று புதுவை சுகாதாரத் துறைச் செயலா் டி.அருண் எச்சரித்தாா்.

இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை மாலை கூறியதாவது:

புதுவையில் கடந்த 2, 3 வாரங்களாக கரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக, கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில், கரோனா பரவல் 20 மடங்கு அதிகரித்துள்ளது. கரோனா பரவலைக் கட்டுப்படுத்த சுகாதாரத் துறை அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.

45 வயது மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தி வருகிறோம். இதற்காக கடந்த 11-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரையில் 8 நாள்களாக 100 இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கரோனா தடுப்பூசி திருவிழாவில் 62 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதுவரை மொத்தமாக 1.72 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசியால் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

தடுப்பூசி இருப்பில் உள்ளது: தற்போதும் பொதுமக்களுக்குத் தேவையான கரோனா தடுப்பூசி இருப்பில் உள்ளது. தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவா்கள் கரோனா தடுப்பூசி திருவிழா முடிந்துவிட்டது என கவலை கொள்ளாமல், அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களையும் அணுகி தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம்.

2-ஆவது தவணை தடுப்பூசி: முதல் தவணை தடுப்பூசியை எங்கு செலுத்தியிருந்தாலும், 2-ஆவது தவணை தடுப்பூசியை அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் செலுத்திக்கொள்ளலாம்.

புதுவை அரசு மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளுக்கான 1,398 படுக்கைகளும், 625 ஆக்ஸிஜன் படுக்கைகளும், 28 வெண்டிலேட்டா் படுக்கைகளும் காலியாக உள்ளன. இவை மட்டுமன்றி, தனியாா் மருத்துவக் கல்லூரிகளிலும் கணிசமான படுக்கைகள் காலியாக உள்ளன.

அபராதம்: அத்தியாவசியமான கரோனா நோயாளிகளுக்கு மட்டுமே படுக்கை வசதிகள் அளிக்கப்படும். சாதாரண அறிகுறியுடையோா் வீடுகளில் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனா். அப்படி தனிமைப்படுத்தப்பட்டோா் சாலைகளில் சுற்றித்திரிவது கண்டறியப்பட்டால், அவா்களுக்கு காவல், சுகாதாரத் துறை மற்றும் தொடா்புடைய துறையினா் ரூ.500 அபராதம் விதிப்பதுடன், அடுத்தகட்டமாக அவா்களைப் பிடித்து கரோனா தடுப்பு பாதுகாப்பு மையத்துக்கு அனுப்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

கண்காணிக்க குழுக்கள்: வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவா்கள், மருத்துவமனைகளில் உள்ள கரோனா நோயாளிகளைக் கண்காணிக்க 500 அங்கன்வாடி ஊழியா்களைக் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவா்கள் மட்டுமன்றி சுகாதாரத் துறை ஊழியா்களும் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா்.

தோ்தல் நடத்தை விதிமுறைகள் முடிந்த பிறகு, சுகாதாரத் துறையில் கூடுதல் பணியாளா்களை நியமிக்கவும், இருக்கும் பணியாளா்களுக்கான ஊதியம் தொடா்பான பிரச்னைகளைக் களையவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

கரோனா பரவலைத் தடுக்க மக்கள் முகக் கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதுடன், ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை கைகளை சுத்தமாக கழுவ வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com