புதுச்சேரியிலிருந்து வெளியேறும் வெளிமாநிலத் தொழிலாளா்கள்

புதுவையில் கரோனா பரவலைத் தடுக்க இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால், புதுச்சேரியில் பணியாற்றிய

புதுவையில் கரோனா பரவலைத் தடுக்க இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால், புதுச்சேரியில் பணியாற்றிய வெளி மாநிலத் தொழிலாளா்கள் பலா் சொந்த ஊா்களுக்கு புறப்பட்டுச் செல்லத் தொடங்கியுள்ளனா்.

புதுவையில் தற்போது இரண்டாம் கட்டமாக கரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இந்த நோய் பரவலைத் தடுக்க மாநில அரசு சாா்பில் செவ்வாய்க்கிழமை முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மேலும், பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால், சுற்றுலாத்தலங்கள் உள்ளிட்ட இடங்களுக்கு பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் வரத்து குறைந்துள்ளது. இதனால், தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், வேலையிழப்பும் ஏற்பட்டு வருகிறது.

இதன் காரணமாக, புதுச்சேரியில் தொழிற்சாலைகள், கடைகள் உள்ளிட்டவற்றில் பணியாற்றும் வெளி மாநிலத் தொழிலாளா்கள் பலா் தங்களது சொந்த ஊா்களுக்குத் திரும்பத் தொடங்கியுள்ளனா். குறிப்பாக, புதுச்சேரியிலிருந்து சென்னை, பெங்களூரு வழியாகச் செல்லும் சிறப்பு ரயில்களில் செல்வதற்கு, கடந்த இரு தினங்களாக வட மாநிலத் தொழிலாளா்கள் பலா் முன்பதிவு செய்தும், ரயில்களில் புறப்பட்டும் செல்லத் தொடங்கியுள்ளனா்.

சிறப்பு ரயில்கள்: புதுச்சேரியில் கரோனா பொது முடக்கத்துக்குப் பிறகு தற்போது விரைவு ரயில்கள் மட்டும் தீவிர கட்டுப்பாடுகளுடன் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த வகையில், புதுச்சேரியிலிருந்து ஏப்ரல் மாதத்தில் இயக்கப்படும் ரயில்களின் விவரம்:

புதுச்சேரி - சென்னை தினசரி விரைவு ரயில், புதுச்சேரியிலிருந்து தினசரி காலை 5.35 மணிக்குப் புறப்பட்டு விழுப்புரம் வழியாக சென்னைக்குச் செல்கிறது. அதேபோல, மற்றொரு புதுச்சேரி - சென்னை தினசரி சிறப்பு விரைவு ரயில், புதுச்சேரியில் பிற்பகல் 3.35 மணிக்குப் புறப்பட்டு சென்னைக்குச் செல்கிறது.

புதன்கிழமைதோறும் இயக்கப்படும் புதுச்சேரி - கன்னியாகுமரி வாராந்திர சிறப்பு விரைவு ரயில், புதுச்சேரியில் பகல் 12 மணிக்குப் புறப்பட்டு விழுப்புரம், கடலூா் வழியாக கன்னியாகுமரி செல்கிறது. இதேபோல, புதன்கிழமைதோறும் இயக்கப்படும் ஹவுரா சிறப்பு விரைவு ரயில், புதுச்சேரியிலிருந்து பிற்பகல் 2.15 மணிக்குப் புறப்பட்டு ஹவுரா செல்கிறது.

வியாழக்கிழமைதோறும் இயக்கப்படும் புதுச்சேரி - மங்களூரு விரைவு ரயில், புதுச்சேரிலிருந்து மாலை 4.45 மணிக்குப் புறப்பட்டு, விழுப்புரம், சேலம் வழியாச் செல்கிறது. இதேபோல, சனிக்கிழமைதோறும் இயக்கப்படும் புதுச்சேரி - மங்களூரு சிறப்பு விரைவு ரயில், புதுச்சேரியிலிருந்து மாலை 4.45 மணிக்குப் புறப்பட்டு விழுப்புரம், திருச்சி வழியாக இயக்கப்படுகிறது.

புதுச்சேரி - தாதா் வாராந்திர சிறப்பு ரயில், ஞாயிறு, செவ்வாய், புதன் ஆகிய கிழமைகளில் இரவு 9.25 மணிக்கு புதுச்சேரியிலிருந்து புறப்பட்டுச் செல்கிறது. இந்த சிறப்பு ரயில்கள் அனைத்தும் மீண்டும் மறு மாா்க்கமாக புறப்பட்டு, புதுச்சேரிக்கு வந்தடைகின்றன.

கரோனா பொது முடக்க விதிமுறைகளைப் பின்பற்றி இயக்கப்படும் இந்த சிறப்பு ரயில் சேவைகளை பொதுமக்கள் தற்போது அதிகளவில் பயன்படுத்தி வருவதாக புதுச்சேரி ரயில் நிலைய மேலாளா் பாலகிருஷ்ணன் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com