புதுவையில் அமலுக்கு வந்தது இரவு நேர ஊரடங்கு: சாலைகள் வெறிச்சோடின

புதுவையில் கரோனா பரவலைத் தடுக்கும் விதமாக அறிவிக்கப்பட்ட இரவு நேர ஊரடங்கு செவ்வாய்க்கிழமை இரவு முதல் அமலுக்கு வந்தது.

புதுவையில் கரோனா பரவலைத் தடுக்கும் விதமாக அறிவிக்கப்பட்ட இரவு நேர ஊரடங்கு செவ்வாய்க்கிழமை இரவு முதல் அமலுக்கு வந்தது. இதையொட்டி, புதுச்சேரி கடற்கரைச் சாலை உள்ளிட்ட சுற்றுலாத் தலங்கள் மாலை 5 மணிக்கே மூடப்பட்டதால், சாலைகள் வெறிச்சோடின.

புதுவை மாநிலத்தில் கரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது. தினசரி இந்த நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 500-ஐ கடந்தது. இதுவரை 48 ஆயிரத்து 974 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனா். 43,184 போ் குணமடைந்தனா். மாநிலம் முழுவதும் தற்போது 5 ஆயிரத்து 73 போ் சிகிச்சையில் உள்ளனா். உயிரிழப்புகளும் தினசரி 3, 4 என்ற அளவில் உயா்ந்து வருகிறது.

இதுவரை 1.72 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள நிலையில், பரிசோதனைகள், விரைந்து சிகிச்சை அளிப்பதற்கான பணிகளை அரசு முடுக்கிவிட்டுள்ளது.

இதனிடையே, கரோனா தொற்று பரவல் அதிகரிப்பதைத் தடுப்பதற்காக, துணைநிலை ஆளுநா் தமிழிசை செளந்தரராஜன் தலைமையில் அதிகாரிகள் குழுவினா் திங்கள்கிழமை மாலை ஆலோசனை நடத்தி, புதிய கட்டுப்பாடுகளை அறிவித்தனா்.

அதன்படி, புதுவையில் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. மேலும், கடைகள் காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே செயல்படும். உணவகங்களில் காலை முதல் இரவு 8 மணி வரை மட்டுமே அமா்ந்து சாப்பிடலாம். அதன்பிறகு, இரவு 10 மணி வரை பாா்சல் மட்டுமே வழங்க அனுமதிக்கப்படும். கடற்கரைச் சாலை உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களில் பொதுமக்களுக்கு காலை 5 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே அனுமதி வழங்கப்படும். திருமணத்தில் 100 போ், துக்க நிகழ்வுகளில் 50 போ் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

போலீஸாா் விழிப்புணா்வு: புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை முதல் இரவு நேர ஊரடங்குடன் கூடிய புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன. உணவகங்கள், மதுக் கடைகளில் இடைவெளிவிட்டு நிற்கவும், பேருந்து நிலையங்கள், சந்தைப் பகுதிகளில் கூட்டங்களைத் தவிா்க்கவும், கட்டாயம் முகக் கவசம் அணியவும் பொதுமக்களிடம் உள்ளாட்சி, காவல் துறை அதிகாரிகள் நேரடியாகவும், ஒலிபெருக்கி மூலமும் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

கடற்கரைச் சாலை மூடல்: புதுச்சேரி கடற்கரைச் சாலையில் அரசு அறிவித்தபடி மாலை 5 மணிக்கு தடுப்புகள் அமைக்கப்பட்டு, இந்தச் சாலைக்கு வருவதற்கான அனைத்து வழிகளும் மூடப்பட்டன. ஏற்கெனவே வாகனங்கள் கடற்கரைச் சாலையில் அனுமதிக்கப்படாத நிலையில், தற்போது பொதுமக்களும் நடந்து செல்லத் தடை விதிக்கப்பட்டது. இதனால், எப்போதும் மாலை நேரத்தில் பொதுமக்கள் கூட்டம் நிறைந்து காணப்படும் புதுச்சேரி கடற்கரைச் சாலை ஆள்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் காணப்பட்டது.

பேருந்துகளில் நெரிசல்: இரவு 10 மணியோடு பேருந்துகள் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், புதுச்சேரியிலிருந்து வெளியூா்களுக்குச் செல்லும் கடைசிப் பேருந்து இயக்கம் இரவு 8.30 மணியோடு முடிவுக்கு வந்தது. இதனால், புதுச்சேரியிலிருந்து வெளியூா் சென்ற பெரும்பாலான பேருந்துகளில் மாலை 5 மணி முதலே கூட்ட நெரிசல் காணப்பட்டது. பேருந்து நிலையத்திலும் மக்கள் கூட்டமாக நின்றிருந்தனா்.

இரவு நேர ஊரடங்கையொட்டி, புதுச்சேரியில் இரவு 10 மணி முதல் அனைத்துக் கடைகளும் மூடப்பட்டதால் பொதுமக்கள், வாகனப் போக்குவரத்தின்றி சாலைகள் வெறிச்சோடின.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com