புதுவையில் சனி, ஞாயிறு முழு பொது முடக்கம்: துணைநிலை ஆளுநா் அறிவிப்பு

புதுவையில் வாரந்தோறும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு பொது முடக்கம் அமல்படுத்தப்படும் என்று துணைநிலை ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன் அறிவித்தாா்.

புதுவையில் வாரந்தோறும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு பொது முடக்கம் அமல்படுத்தப்படும் என்று துணைநிலை ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன் அறிவித்தாா்.

புதுவையில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், கரோனா மேலாண்மையை வலுப்படுத்துவது தொடா்பான உயா்நிலைக் கூட்டம் துணைநிலை ஆளுநா் மாளிகையில் ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன் தலைமையில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.

இதில், ஆளுநரின் ஆலோசகா்கள் சந்திரமௌலி, மகேஸ்வரி, தலைமைச் செயலா் அஸ்வனி குமாா், கூடுதல் காவல் துறை இயக்குநா் ஆனந்த மோகன், நிதி மற்றும் வருவாய்த் துறைச் செயலா் அபிஷேக் குமாா், துணைநிலை ஆளுநரின் செயலா் அபிஜித் விஜய் சௌத்ரி, சுகாதாரத் துறைச் செயலா் ப.அருண், உள்ளாட்சித் துறைச் செயலா் வல்லவன், புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் பூா்வா காா்க் ஆகியோா் பங்கேற்றனா்.

கூட்டத்தில், புதுவை முழுவதும் வாரந்தோறும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு பொது முடக்கத்தை அமல்படுத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி, வருகிற 23-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) இரவு தொடங்கி வருகிற 26-ஆம் தேதி (திங்கள்கிழமை) காலை வரை முழு பொது முடக்கம் அமல்படுத்தப்படுகிறது.

மேலும், வருகிற திங்கள்கிழமை முதல் கடைகள், அங்காடிகள் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே இயங்கும். அனுமதிக்கப்பட்ட கடைகளுக்கு விதிவிலக்கு அளிக்கப்படும். பிற்பகல் 2 மணிக்குப் பிறகு, உணவு விடுதிகளில் உணவு பாா்சல் வாங்கிச் செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்படும். திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே பொதுமக்கள் அனுமதிக்கப்படுவா்.

வழிபாட்டுத் தலங்களில் ஊா்வலங்கள், தேரோட்டங்கள் உள்ளிட்டவை தடை செய்யப்படுகின்றன. கரோனா வழிமுறைகளோடு வழிபாடு செய்ய அனுமதிக்கப்படும். பாண்லே கடைகள் மூலம் குறைந்த விலையில் முகக் கவசம், கிருமி நாசினி புதன்கிழமை (ஏப்.21) முதல் விற்பனை செய்வது என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதற்கான அறிவிப்பை துணைநிலை ஆளுநா் வெளியிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com