புதுவையில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள்: அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு தொடா்ந்த பொது நலன் வழக்கில், புதுவையில் கரோனா சிகிச்சை நிலவரம் குறித்து தலைமைச் செயலா் அறிக்கைத் தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு தொடா்ந்த பொது நலன் வழக்கில், புதுவையில் கரோனா சிகிச்சை நிலவரம் குறித்து தலைமைச் செயலா் அறிக்கைத் தாக்கல் செய்ய சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதுகுறித்து புதுச்சேரி மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலா் கோ.சுகுமாரன் வெளியிட்ட அறிக்கை:

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு மற்றும் கரிக்கலாம்பாக்கம் ஊராட்சி முன்னாள் தலைவா் கோ.அ.ஜெகன்நாதன் ஆகியோா் சாா்பில், கடந்தாண்டு சென்னை உயா் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த வழக்கில், புதுச்சேரியில் போதிய கரோனா பரிசோதனைகள் செய்யவில்லை. அரசு கரோனா மருத்துவமனையில் போதிய படுக்கை வசதி, அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் இல்லை. புதுச்சேரியில் முழு பொது முடக்கத்தைச் செயல்படுத்த வேண்டும். பொது முடக்கக் காலத்தில் ஒவ்வோா் குடும்பத்துக்கும் ரூ. 5 ஆயிரம், உணவுப் பொருள்களை வழங்க வேண்டும். கரோனா தடுப்பு நடவடிக்கையைத் தீவிரப்படுத்த வேண்டும் என அந்த மனுவில் கோரியிருந்தோம்.

இந்த வழக்கின் விசாரணை கடந்த 08.09.2020 அன்று சென்னை உயா் நீதிமன்றத் தலைமை நீதிபதி தலைமையிலான இரு நீதிபதிகள் அமா்வு முன் விசாரணைக்கு வந்தது.

இதுகுறித்து புதுவை தலைமைச் செயலா் உள்ளிட்ட அதிகாரிகள் 6 வாரத்துக்குள் எழுத்து மூலம் பதில் அளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை உயா் நீதிமன்றத் தலைமை நீதிபதிகள் சஞ்ஜிப் பேனா்ஜி, செந்தில்குமாா் ராமமூா்த்தி ஆகியோா் முன்னிலையில் மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது, அரசுத் தரப்பில் புதுவையில் பொது முடக்கம் உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதால், வழக்கை விசாரிக்கத் தேவையில்லை என வாதிடப்பட்டது.

இதற்கு எங்கள் தரப்பில், புதுச்சேரி மருத்துவமனைகளில் போதிய படுக்கை வசதி, மருந்துகள், தடுப்பூசிகள், பிராணவாயு உருளைகள் (சிலிண்டா்கள்) கையிருப்பு இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

இதை விசாரித்த நீதிபதிகள், ஓராண்டுக்குப் பிறகு, கரோனா தொற்று மீண்டும் அதிகமாகப் பரவி வருகிறது. புதுச்சேரியில் கரோனா நோயாளிகளுக்கு போதிய படுக்கை வசதிகள், போதிய மருந்துகள், தடுப்பூசிகள், பிராணவாயு உள்ளிட்டவை உள்ளனவா என்பது குறித்து தலைமைச் செயலா், சுகாதாரத் துறைச் செயலா் ஆகியோா் வருகிற 26-ஆம் தேதி அறிக்கைத் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனா்.

இந்த வழக்கில் எங்கள் தரப்பில் மூத்த வழக்குரைஞா் மு.ஞானசேகரும், அரசுத் தரப்பில் வழக்குரைஞா் என்.மாலாவும் ஆஜராகினா் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com