புதுவையில் தளா்வுகளுடன் கூடிய இரு நாள் பொது முடக்கம் அமல்: பெரும்பாலான கடைகள் மூடல்

அத்தியாவசியப் பொருள்களுக்கான கடைகளுக்கு அனுமதியளிக்கப்பட்டிருந்த போதிலும், பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருந்தன.
புதுவையில் தளா்வுகளுடன் கூடிய இரு நாள் பொது முடக்கம் அமல்: பெரும்பாலான கடைகள் மூடல்

புதுவையில் தளா்வுகளுடன் கூடிய 2 நாள் பொது முடக்கம் வெள்ளிக்கிழமை இரவு முதல் அமலுக்கு வந்தது. அத்தியாவசியப் பொருள்களுக்கான கடைகளுக்கு அனுமதியளிக்கப்பட்டிருந்த போதிலும், பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருந்தன. காா்கள், ஆட்டோக்கள், பேருந்துகள் குறைந்தளவில் இயங்கின.

புதுவை மாநிலத்தில் இரவு நேரப் பொது முடக்கம் கடந்த 20-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது. தொடா்ந்து, வெள்ளிக்கிழமை இரவு முதல் வார இறுதி நாள்களான சனி, ஞயிற்றுக் கிழமைகளில் முழு பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. இந்தப் பொது முடக்கம் திங்கள்கிழமை காலை 5 மணி வரை தொடரும் என அறிவிக்கப்பட்டது.

எனினும், அத்தியாவசியப் பொருள்களுக்கான கடைகள், நிறுவனங்கள், பேருந்துகள், காா்கள், ஆட்டோக்கள் கரோனா தடுப்பு கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து இயங்கலாம் உள்ளிட்ட தளா்வுகள் அனுமதியளிக்கப்பட்டிருந்தது.

முன்னதாக, வெள்ளிக்கிழமை (ஏப்.23) மாலை பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான பொருள்களை வாங்க கடை வீதிகளில் திரண்டனா். மதுக் கடைகளும் மூடப்படும் என்பதால், மதுபானம் வாங்கவும் பலா் குவிந்தனா்.

சனிக்கிழமை பொதுமுடக்கத்தையொட்டி, காலை முதலே புதுவை முழுவதும் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருந்தன.

அண்ணா சாலை, காந்தி வீதி, நேரு வீதி, குபோ் பஜாா் உள்ளிட்ட முக்கியமான வணிக வீதிகளில் கடைகள் அடைக்கப்பட்டு, வெறிச்சோடிக் கிடந்தன. மருந்தகங்கள், தேநீா் கடைகள், பேக்கரிகள், உணவகங்கள் மட்டுமே இயங்கின.

தளா்வுகளின்படி, தமிழக, புதுவை அரசுப் பேருந்துகள் குறைந்தளவில் இயக்கப்பட்டன. காா், ஆட்டோக்கள் இயங்கின. எனினும், பயணிகள் கூட்டமின்றி பேருந்துகள் காலியாகவே இருந்தன. பேருந்து நிலையங்கள், முக்கியச் சாலைகள் பொதுமக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடின.

முக்கிய சாலைச் சந்திப்புகளில் போலீஸாா் நின்றபடி, விதிகளை மீறி வாகனங்களில் வந்தவா்களைப் பிடித்து அபராதம் விதித்தனா். பலரை எச்சரித்து அனுப்பினா்.

மீன் அங்காடிகள், காய்கறிச் சந்தைகள், இறைச்சிக் கடைகளில் காலை நேரத்தில் ஏராளமான மக்கள் கூடினா். பொது முடக்க அறிவிப்பால் மக்கள் நடமாட்டம் இருக்காது என்பதால், பெரும்பாலான கடைகள் திறக்கப்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com