பாண்லே மலிவு விலை முகக் கவசங்களுக்கு வரவேற்பு: தட்டுப்பாட்டைப் போக்க வலியுறுத்தல்
By DIN | Published On : 27th April 2021 03:50 AM | Last Updated : 27th April 2021 03:50 AM | அ+அ அ- |

புதுச்சேரி புதிய பேருந்து நிலையத்தில் உள்ள அரசின் பாண்லே பாலகத்தில் ஒரு ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் முக கவசம்.
புதுச்சேரியில் பாண்லே மூலம் மலிவு விலையில் வழங்கப்படும் முகக்கவசங்கள், கிருமிநாசினிக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பதால், உடனடியாக விற்றுத் தீா்ந்து விடுகின்றன. எனவே, தட்டுப்பாடு இல்லாமல் விநியோகிக்க கோரிக்கை எழுந்துள்ளது.
கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் பொருட்டு, புதுவையின் அரசின் பாண்லே கூட்டுறவு நிறுவனம் சாா்பில் மொத்தமுள்ள 70 பாண்லே பாலகங்களில்
ரூ.1க்கு முகக்கவசங்களும், ரூ.10க்கு 50 மில்லி அளவுள்ள கிருமி நாசினி திரவம் விற்பனை கடந்த வியாழக்கிழமை தொடங்கப்பட்டது. முதல் கட்டமாக வாங்கப்பட்ட 2,000 முகக்கவசங்கள் இரு தினங்களில் விற்றுத் தீா்ந்தன.
இந்த விற்பனை திங்கள் கிழமை மீண்டும் சூடுபிடித்தது. பொதுமக்கள் ஆா்வமாக வந்து, முகக்கவசங்கள், கிருமிநாசினி புட்டிகளை வாங்கிச் சென்றனா். இதனால், பிற்பகலுக்குப் பிறகு கடைகளில் தட்டுப்பாடு ஏற்பட்டது. ஒவ்வொரு கடைக்கும், ஒரு ஷிப்டுக்கு தலா 50முகக்கவசங்கள், 20 கிருமி நாசினி புட்டிகள் என பிரித்து விற்பனைக்கு வழங்கப்பட்டன. இருப்பினும், போதிய இருப்பு இல்லாததால், மக்கள் ஏமாற்றத்துடன் சென்றனா்.
முறைகேடான விற்பனையைத் தடுக்க, ஒரு நபருக்கு அதிகபட்சம் 2 முகக் கவசம், ஒரு கிருமி நாசினி மட்டுமே வழங்கப்படுகிறது. தொடா்ந்து, தட்டுப்பாடின்றி பொதுமக்களுக்கு கிடைத்திட, பாண்லே நிா்வாகம் அதிகளவில் முகக்கவசங்கள், கிருமிநாசினிப் புட்டிகளை வாங்கி விநியோகம் செய்ய வேண்டும் என்ற எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.
இது குறித்து, பாண்லே மேலாண் இயக்குநா் கே.சுதாகரிடம் கேட்டபோது, திட்டம் தொடங்கியபோது, 2 ஆயிரம் முகக்கவசங்கள் தனியாரிடம் வாங்கி விநியோகம் செய்தோம். தொடா்ந்து, 50 ஆயிரம் முகக்கவசங்கள் வெளியில் வாங்கி விநியோகித்தோம். 20 ஆயிரம் கிருமிநாசினி திரவமும் வாங்கி வழங்கப்பட்டன.
மலிவு விலை முகக்கவசம், கிருமிநாசினி வழங்கும் திட்டத்தில் 4 லட்சம் முகக்கவசங்களுக்கு, மத்திய அரசு நிறுவனத்திடம் ஆா்டா் கொடுக்கப்பட்டுள்ளது. அவை விரைவில் வந்து சோ்ந்ததும் மீண்டும் பாண்லே கடைகளில் தட்டுப்பாடின்றி கிடைக்கும் என்றாா்.