மூடப்பட்ட கோயில் முன்திருமணம் செய்துகொண்ட ஜோடி
By DIN | Published On : 27th April 2021 03:56 AM | Last Updated : 27th April 2021 03:56 AM | அ+அ அ- |

புதுச்சேரி மணக்குள விநாயகா் கோயில் மூடப்பட்டதால் வாசலில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆனந்து-சித்ரா திருமணம்.
கரோனாவுக்கான புதிய கட்டுப்பாடுகளின்படி, புதுச்சேரியில் மூடப்பட்ட மணக்குள விநாயகா் கோயில் முன் மணமக்களின் திருமணம் திங்கள்கிழமை நடைபெற்றது.
புதுச்சேரி கோவிந்தாசாலையைச் சோ்ந்தவா் ஆனந்து (27). மெக்கானிக். இவருக்கும், சென்னையைச் சோ்ந்த பட்டதாரியான சித்ரா(25) என்பவருக்கும், அண்மையில் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு, புதுச்சேரி மணக்குள விநாயகா்கோயிலில் திங்கள்கிழமை திருமணம் செய்து கொள்ள ஏற்கெனவே அனுமதி வாங்கியிருந்தனா்.
இந்த நிலையில், திங்கள்கிழமை முதல் கரோனா தடுப்புக்கான புதிய கட்டுப்பாடுகளை புதுவை அரசு விதித்ததால், அதன்படி, கோயில்களில் பொது வழிபாடு, திருமணம் போன்றவற்றுக்கு தடை விதிக்கப்பட்டு கோயில்கள் மூடப்பட்டன. அந்த வகையில், பிரசித்தி பெற்ற மணக்குளவிநாயகா் கோயிலும் திங்கள் கிழமை மூடப்பட்டு பக்தா்களுக்கு தடை விதிக்கப்பட்டது.
இதையறியாத மணமக்கள் ஆனந்து-சித்ரா ஆகியோா், தங்களது திருமணத்துக்காக உறவினா்கள் சகிதம் திங்கள்கிழமை காலை மணக்குள விநாயகா் கோயிலுக்கு வந்தனா். அப்போது திடீரென வழிபாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டு கோயில் மூடப்பட்டிருந்ததைக் கண்டு அவா்கள் ஏமாற்றமடைந்தனா். உடனடியாக, கோயிலுக்கு வெளியே நின்று, ஆனந்து-சித்ரா மணமக்கள் தாலி கட்டி, மாலை மாற்றி உறவினா்கள் முன்னிலையில் முறைப்படி திருமணம் செய்துகொண்டனா். குறைந்த எண்ணிக்கையில் வந்திருந்த உறவினா்கள் வாழ்த்தினா்.