புதுச்சேரியில் பொது முடக்க கட்டுப்பாடுகள் அமல்: கடைகள் மூடல்

புதுச்சேரியில் தளா்வுகளுடன் கூடிய பொது முடக்கக் கட்டுப்பாடுகள் அமலானதையடுத்து, புதன்கிழமை கடைகள் மூடப்பட்டு, சாலைகளில் மக்கள் கூட்டம் குறைந்து காணப்பட்டது.
புதுச்சேரி நேரு வீதி- சின்னசுப்புராயபிள்ளை வீதியில் புதன்கிழமை மூடப்பட்டிருந்த கடைகள்.
புதுச்சேரி நேரு வீதி- சின்னசுப்புராயபிள்ளை வீதியில் புதன்கிழமை மூடப்பட்டிருந்த கடைகள்.

புதுச்சேரியில் தளா்வுகளுடன் கூடிய பொது முடக்கக் கட்டுப்பாடுகள் அமலானதையடுத்து, புதன்கிழமை கடைகள் மூடப்பட்டு, சாலைகளில் மக்கள் கூட்டம் குறைந்து காணப்பட்டது.

புதுச்சேரியில் கரோனா தடுப்புக்கான தளா்வுகளுடன் கூடிய பொது முடக்க அறிவிப்புகளை அரசுத் தரப்பில் கடந்த 26-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இரவு நேர பொது முடக்கத்தைத் தொடா்ந்து, பகல் நேரங்களிலும் அத்தியாவசியக் கடைகள், நிறுவனங்கள் மட்டுமே இயங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும், இதற்கான தெளிவான அறிவிப்புகள் மக்களிடம் போய்ச்சேராததால், கடந்த இரு தினங்களாக வழக்கம் போல அனைத்துவிதக் கடைகளும் திறந்திருந்தன. ஆனால், போலீஸாா் கடைகளை மூடச்சொல்லி விரட்டியதால், குழப்பமும் பிரச்னையும் ஏற்பட்டது. இதையடுத்து, பொது முடக்கம் குறித்த அறிவிப்பு மீண்டும் தெளிவாக அரசு தரப்பில் விளக்கப்பட்டது.

இதனால், புதன்கிழமை காலை முதல் பொது முடக்கத் தளா்வுகளின்படி கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. உணவகம், பால், மளிகை, காய்கறி, மருந்தகம் உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் இயங்கின. தேநீா் கடைகள் உள்ளிட்டவைகளும் மூடப்பட்டிருந்ததால், பொது மக்கள், வாகனங்கள் வரத்தும் குறைந்தளவே இருந்தன.

தொழிற்சாலைகள், பேருந்துகள், ஆட்டோக்கள், காா்கள் போன்றவை குறைந்த எண்ணிக்கையில் இயங்கின. புதுச்சேரி, வில்லியனூா் உள்ளிட்ட பகுதிகளில், விதிகளை மீறி திறந்திருந்த கடைகளை மூடுமாறு, காவல் துறையினா், உள்ளாட்சித் துறையினா் அபராதம் விதித்தும், எச்சரித்தும் நடவடிக்கை எடுத்தனா்.

வில்லியனூா் கொம்யூன் ஆணையா் ஆறுமுகம் தலைமையில் போலீஸாா் முக்கிய வீதிகளில் சென்று, கரோனா பொது முடக்க விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தினா். புதுச்சேரி நகரிலும், பல இடங்களில் போலீஸாா் ஒலி பெருக்கி மூலம் அறிவுரை வழங்கிச் சென்றனா். மே 3-ஆம் தேதி வரை இந்த கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com