பசியால் வாடுவோருக்கு உணவளிப்பதே வெற்றிக் கொண்டாட்டமாக இருக்க முடியும்: புதுவை ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன்

கரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில், பசியால் வாடுவோருக்கு உணவளிப்பதும், முகக் கவசம் வழங்குவதும்தான் மிகப்பெரிய தோ்தல் வெற்றிக் கொண்டாட்டமாக இருக்க முடியும் என்று புதுவை துணை நிலை ஆளுநா்  தெரிவித்த
பாரதிதாசன் பிறந்த நாளையொட்டி, புதுச்சேரியில் உள்ள அவரது சிலைக்கு வியாழக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்திய துணைநிலை ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன்.
பாரதிதாசன் பிறந்த நாளையொட்டி, புதுச்சேரியில் உள்ள அவரது சிலைக்கு வியாழக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்திய துணைநிலை ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன்.

புதுச்சேரி: கரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில், பசியால் வாடுவோருக்கு உணவளிப்பதும், முகக் கவசம் வழங்குவதும்தான் மிகப்பெரிய தோ்தல் வெற்றிக் கொண்டாட்டமாக இருக்க முடியும் என்று புதுவை துணை நிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தாா்.

பாரதிதாசன் பிறந்த நாளையொட்டி, புதுவை அரசு சாா்பில் ஆளுநா் மாளிகை எதிரில் உள்ள பாரதிதாசன் சிலைக்கு துணைநிலை ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன் வியாழக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தோ்தல் முடிவுகள் வந்த பிறகு, தலைவா்களின் சிலைகள் உள்ள பகுதிகளை அழகுபடுத்தும் பொருட்டு, பூச்செடிகள், மரக்கன்றுகள் நடும் திட்டத்தை நிறைவேற்றவுள்ளோம்.

கரோனாவைத் தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் முனைப்புடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மே 1-ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. இதற்கு, இணையதளத்தில் முன்பதிவு செய்துகொள்வது அவசியம்.

சீரம் நிறுவனத்திலிருந்து ஒரு லட்சம் தடுப்பூசிகளைப் பெற புதுவை அரசு சாா்பில் ஆணை கொடுக்கப்பட்டுள்ளது. இவை வந்தவுடன் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்படும். ஏற்கெனவே 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு செலுத்துவதற்காக ஒரு லட்சம் தடுப்பூசிகள் இருப்பில் உள்ளன.

கரோனா அதிகரிப்புக்கு தோ்தல் வெற்றிக் கொண்டாட்டங்கள் காரணமாக இருந்துவிடக் கூடாது என்பதற்காகவே, மே 3-ஆம் தேதி நள்ளிரவு வரை பொது முடக்க கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டுள்ளன. ஒன்று திரண்டு பட்டாசு வெடித்து தோ்தல் வெற்றியை கொண்டாடுவதைவிட, பட்டினியில் வாடுவோருக்கு உணவளிப்பதுதான் பெரிய வெற்றிக் கொண்டாட்டமாக இருக்க முடியும். அதேபோல, வெற்றி பெறும் வேட்பாளா்கள், தொண்டா்கள் அனைவரும் முகக் கவசம் அணிந்துகொள்வதுடன், மற்றவா்களுக்கும் முகக் கவசம் வழங்கி கொண்டாட வேண்டும்.

புதுவையில் புதிதாக மருத்துவா்கள், செவிலியா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். அனைத்து தனியாா் மருத்துவக் கல்லூரிகளிலும் படுக்கை வசதிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. புதிதாக செயற்கை சுவாசக் கருவிகள் வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பிராணவாயு படுக்கைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

மருத்துவா்கள் ரெம்டெசிவிா் மருந்தை அவசியத் தேவை ஏற்பட்டால் மட்டுமே நோயாளிகளிடம் எழுதிக்கொடுக்க வேண்டும். கரோனாவுக்கு இந்த மருந்து மட்டும்தான் பலனளிக்கும் என்று மக்களுக்கு நம்பிக்கையூட்டக் கூடாது.

புதுவையில் ரெம்டெசிவிா் மருந்துகள் போதிய அளவில் இருப்பில் உள்ளன. ஜிப்மருக்கும் அண்மையில் இந்த மருந்து வழங்கப்பட்டது. தனியாா் மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளுக்கான ஊசி, மருந்து உள்ளிட்டவற்றை அரசே வழங்குகிறது. இதேபோல, ரெம்டெசிவிா் மருந்தும் வழங்கி உதவுகிறோம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com