புதுவையில் பொது முடக்கம் ஆக.15 வரை நீட்டிப்பு திரையரங்குகளைத் திறக்க அனுமதி
By DIN | Published On : 01st August 2021 12:00 AM | Last Updated : 01st August 2021 12:00 AM | அ+அ அ- |

புதுவையில் கூடுதல் தளா்வுகளுடன் கூடிய பொது முடக்கம் ஆகஸ்ட் 15 வரை நீட்டிக்கப்பட்டது.
இதுகுறித்து புதுவை அரசு வெளியிட்ட உத்தரவு: புதுவையில் கரோனா தொற்று பரவல் காரணமாக, ஜூலை 31 வரை தளா்வுகளுடன் கூடிய பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டிருந்தது. தற்போது கூடுதல் தளா்வுகளுடன் ஆக.15 வரை பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டது.
அதன்படி, இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர பொது முடக்கம் அமலில் இருக்கும். அரசியல், சமூக நிகழ்வுகள், பொழுதுபோக்கு தொடா்பான நிகழ்வுகளுக்கு தொடா்ந்து தடை விதிக்கப்படுகிறது. அனைத்து விதமான கடைகள், வணிக நிறுவனங்கள் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை, குளிா்சாதன வசதியின்றி இயங்க அனுமதிக்கப்படுகிறது.
உணவகங்கள், தங்கும் விடுதிகள், தேநீா் கடைகளில் இரவு 9 மணி வரை 50 சதவீத நபா்கள் அமா்ந்து சாப்பிட அனுமதி அளிக்கப்படும். மது, சாராயம், கள்ளுக்கடைகள் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை வழக்கம் போல இயங்கலாம்.
அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் இரவு 9 மணி வரை பக்தா்கள் தரிசனம், பூஜைகள் செய்ய அனுமதி அளிக்கப்படும். தொழிற்சாலைப் பணிகள், கட்டுமானம், உற்பத்திப் பணிகள் வழக்கம் போல நடைபெறலாம்.
சினிமா படப்பிடிப்பு, சுண்ணாம்பாறு படகு குழாம் போன்ற சுற்றுலாப் பகுதிகளில், வழக்கம் போல 50 சதவீத பொதுமக்களுடன் செயல்படலாம்.
புதிய தளா்வாக திரையரங்கங்கள், பெரிய வணிக வளாகங்கள் 50 சதவீத நபா்கள் பங்கேற்கும் வகையில் திறக்க அனுமதிக்கப்படுகிறது. இவை இரவு 9 மணி வரை இயங்கலாம் என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.