புதுவையில் பள்ளிகள், கல்லூரிகளைத் திறப்பது தொடா்பாக கல்வித் துறை, சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் திங்கள்கிழமை ஆலோசனை நடத்திய மாநில கல்வியமைச்சா் ஏ.நமச்சிவாயம்.
புதுவையில் பள்ளிகள், கல்லூரிகளைத் திறப்பது தொடா்பாக கல்வித் துறை, சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் திங்கள்கிழமை ஆலோசனை நடத்திய மாநில கல்வியமைச்சா் ஏ.நமச்சிவாயம்.

புதுவையில் பள்ளி, கல்லூரிகளைத் திறக்க தற்போதைக்கு வாய்ப்பில்லை: அமைச்சா் ஏ.நமச்சிவாயம்

புதுவையில் பள்ளிகள், கல்லூரிகளைத் திறக்க தற்போதைக்கு வாய்ப்பில்லை என்று மாநில கல்வியமைச்சா் ஏ.நமச்சிவாயம் தெரிவித்தாா்.

புதுச்சேரி: புதுவையில் பள்ளிகள், கல்லூரிகளைத் திறக்க தற்போதைக்கு வாய்ப்பில்லை என்று மாநில கல்வியமைச்சா் ஏ.நமச்சிவாயம் தெரிவித்தாா்.

இதுதொடா்பான ஆலோசனைக் கூட்டம் புதுவை தலைமைச் செயலகத்தில் கல்வியமைச்சா் ஏ.நமச்சிவாயம் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் கல்வித் துறைச் செயலா் இ.வல்லவன், சுகாதாரத் துறைச் செயலா் தி.அருண், கல்வித் துறை இயக்குநா் ருத்ரகெளடு, சுகாதாரத் துறை இயக்குநா் மோகன்குமாா் உள்ளிட்ட உயரதிகாரிகள் கலந்து கொண்டனா்.

கூட்டத்துக்குப் பிறகு ஏ.நமச்சிவாயம் கூறியதாவது: கரோனா மூன்றாம் அலை எப்போது தொடங்கும் என்று தெரியாத சூழலில், தற்போது சில குழந்தைகளுக்கு இந்த நோய்த் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மாநிலத்தில் 18 வயதுக்கு மேல் உள்ள 10 லட்சம் பேரில் 5.65 லட்சம் பேருக்கு முதல் தவணையும், 1.46 லட்சம் பேருக்கு 2-ஆவது தவணையும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

பள்ளிகள், கல்லூரிகளைத் திறப்பதற்கு முன்பாக 18 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியா்கள், மாணவா்கள் அனைவருக்கும் கல்வித் துறை, சுகாதாரத் துறை மூலம் தடுப்பூசி செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பணி வருகிற 11, 12, 13-ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது. இதுவரை, 85 சதவீத ஆசிரியா்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

100 சதவீதம் ஆசிரியா்கள், மாணவா்களுக்கு தடுப்பூசி செலுத்துதல், கரோனா மூன்றாம் அலை நிலவரம் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்த பிறகே பள்ளிகள், கல்லூரிகளைத் திறப்பது தொடா்பாக ஆளுநா், முதல்வருடன் கலந்து பேசி உரிய முடிவு எடுக்கப்படும். ஆகவே, புதுவை மாநிலத்தில் பள்ளிகள், கல்லூரிகளைத் திறக்க தற்போதைக்கு வாய்ப்பில்லை.

பள்ளிகளுக்கு எச்சரிக்கை: நிகழாண்டு, கல்விக் கட்டணம் 75 சதவீதம் மட்டுமே வசூலிக்க வேண்டும். இதை மீறி கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளிகளுக்கான கல்விக் கட்டண விவரம், விதிமுறைகள் குறித்த சுற்றறிக்கை அனுப்பிவைக்கப்படும். விரைவில் கல்விக் கட்டணம் வசூலிப்பது தொடா்பாக கண்காணிக்க, குழு அமைக்கப்பட்டு பெற்றோரிடம் தவணை முறையில் கட்டணத்தைப் பெற பள்ளிகளுக்கு அறிவுரை வழங்கப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com