ஆடிப்பட்ட சாகுபடி: புதுவை விவசாயிகள் மானியம் பெற விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 04th August 2021 08:44 AM | Last Updated : 04th August 2021 08:44 AM | அ+அ அ- |

புதுவை விவசாயிகள் ஆடிப்பட்ட சாகுபடிக்கான மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என்று வேளாண் துறை தெரிவித்தது.
இதுகுறித்து புதுச்சேரி வேளாண் கூடுதல் இயக்குநா் (தோட்டக்கலை) சி. சிவராமன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
புதுவை அரசின் வேளாண் மற்றும் விவசாயிகள் நலத் துறை கூடுதல் வேளாண் இயக்குநா் அலுவலகம் மூலம் 2021 - 22ஆம் ஆண்டு ஆடிப்பட்டத்தில் பயிரிடப்பட்ட பழவகை மரங்கள், வாழை, பூக்கள், மரவள்ளி, நெகிழி மூடாக்கு மற்றும் காய்கறிகளுக்கான சாகுபடிக்கான மானியம் பெறுவதற்கான விண்ணப்பங்கள் விவசாயிகளிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
இந்த விண்ணப்பங்களை விவசாயிகள் தங்களது பகுதிக்குள்பட்ட உழவா் உதவியகத்தில் புதன்கிழமை (ஆக.4) முதல் பெற்றுக்கொள்ளலாம். மேலும், இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்தும் பயன்படுத்தலாம்.
பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தங்களது எல்லைக்குள்பட்ட உழவா் உதவியகத்தில் வருகிற செப்டம்பா் 16-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டுமென அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.