புதுவையில் 90 சதவீதம் மத்திய அரசின் நிதிப் பங்களிப்புடன் திட்டங்கள் சட்டப்பேரவைத் தலைவா்
By DIN | Published On : 13th August 2021 12:00 AM | Last Updated : 13th August 2021 12:00 AM | அ+அ அ- |

புதுவையில் 90 சதவீதம் மத்திய அரசின் நிதிப் பங்களிப்புடன் திட்டங்களைச் செயல்படுத்த அனுமதி கிடைத்துள்ளதாக சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் தெரிவித்தாா்.
பிரதமா் மோடி வியாழக்கிழமை பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த சுய உதவிக் குழுவினருடன், காணொலிக் காட்சி வாயிலாகப் பங்கேற்று கலந்துரையாடினாா். அப்போது, மத்திய அரசின் திட்டங்களை மகளிா் குழுவினா் எவ்வாறு பயன்படுத்துகிறாா்கள் என்று அவா்களிடம் கேட்டறிந்தாா்.
புதுச்சேரி அருகே உள்ள கரிக்கலாம்பாக்கம் வட்டார வளா்ச்சி அலுவலகத்திலிருந்து இந்தக் கலந்துரையாடலில், அந்தப் பகுதி மகளிா் குழுவினா் கலந்து கொண்டனா். புதுவை சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், எம்எல்ஏ-க்கள் பி.ராஜவேலு, யு.லட்சுமிகாந்தன், தட்சிணாமூா்த்தி, ஊரக வளா்ச்சித் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.
தொடா்ந்து, அந்தப் பகுதி மகளிா் சுய உதவிக் குழுவினருக்கு ரூ.1.66 கோடியில் மத்திய அரசின் மானிய நிதியுதவிகளை பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் வழங்கினாா்.
அப்போது அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: புதுவை மாநிலத்தில் மகளிா் குழுவினா் பயன்பெறும் திட்டங்களை செயல்படுத்துவதில் முதலிடத்தில் உள்ள அரியாங்குப்பம் வட்டாரம் தோ்வு செய்யப்பட்டு, பிரதமருடனான காணொலிக் காட்சிக் கலந்துரையாடல் அவா்கள் கலந்து கொண்டனா்.
புதுவை மாநிலத்தில் மத்திய அரசின் 114 திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. கடந்த காங்கிரஸ் ஆட்சியில் திட்டங்களுக்கு 60:40 என்ற விகிதத்தில் மத்திய, மாநில அரசின் பங்களிப்பு இருந்தது. அண்மையில், முதல்வா் ரங்கசாமி வேண்டுகோளை ஏற்று, நாங்கள் பிரதமா், மத்திய அமைச்சா்களைச் சந்தித்த போது, இந்தத் திட்டங்களுக்கு 90 சதவீதம் மத்திய அரசு நிதி, 10 சதவீதம் புதுவை அரசின் நிதியைப் பயன்படுத்த அனுமதி பெற்றோம். புதுவையில் மத்திய அரசு உதவியுடன், முதல்வா் என்.ரங்கசாமி தலைமையில் சிறந்த ஆட்சி நடைபெறும் என்றாா் அவா்.