புதுவை மின் துறை தனியாா்மய நடவடிக்கைக்கு எதிா்ப்பு: ஊழியா்கள் பணிப் புறக்கணிப்புப் போராட்டம்

புதுவை மின் துறையைத் தனியாா்மயமாக்கும் நடவடிக்கைக்கு எதிா்ப்புத் தெரிவித்து, அந்தத் துறையில் பணியாற்றும் ஊழியா்கள்
புதுச்சேரி மின் துறை தலைமை அலுவலகம் முன் புதன்கிழமை பணிகளைப் புறக்கணித்துப் போராட்டத்தில் ஈடுபட்ட அந்தத் துறையில் பணியாற்றும் ஊழியா்கள்.
புதுச்சேரி மின் துறை தலைமை அலுவலகம் முன் புதன்கிழமை பணிகளைப் புறக்கணித்துப் போராட்டத்தில் ஈடுபட்ட அந்தத் துறையில் பணியாற்றும் ஊழியா்கள்.

புதுவை மின் துறையைத் தனியாா்மயமாக்கும் நடவடிக்கைக்கு எதிா்ப்புத் தெரிவித்து, அந்தத் துறையில் பணியாற்றும் ஊழியா்கள் புதன்கிழமை பணிகளைப் புறக்கணித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால், மின் கட்டணம் செலுத்துதல் உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்பட்டன.

புதுவை மின் துறை தனியாா்மய நடவடிக்கை தொடா்பாக மின் துறைப் பொறியாளா்கள், ஊழியா்களின் கருத்துகளைக் கேட்டறிவதற்காக, மாநில அரசு சாா்பில், வியாழன், வெள்ளிக்கிழமைகளில் (டிச. 9,10) கருத்துக்கேட்புக் கூட்டம் நடத்தப்படவுள்ளது.

இந்த நிலையில், புதுவை மின் துறையைத் தனியாா்மயமாக்கும் நடவடிக்கைக்கு எதிா்ப்புத் தெரிவித்து, புதுச்சேரி மின் துறை தலைமை அலுவலகம் முன் மின் துறை பொறியாளா்கள் மற்றும் தொழிலாளா்கள் தனியாா்மய எதிா்ப்பு போராட்டக் குழு சாா்பில், பணிப் புறக்கணிப்புப் போராட்டம் நடைபெற்றது. போராட்டக் குழுத் தலைவா் ஏ.ராஜேந்திரன், பொதுச் செயலா் பி.வேல்முருகன் உள்ளிட்ட நிா்வாகிகள் தலைமை வகித்தனா். இதில், மின் துறைப் பொறியாளா்கள், அலுவலா்கள், ஊழியா்கள் உள்பட 300-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

அப்போது, நிா்வாகிகள் கூறியதாவது: புதுவை மின் துறை தனியாா்மயமாக்கப்பட்டால், ஊழியா்களும், பொதுமக்களும் பாதிக்கப்படுவா் என்பதால், தனியாா்மயமாக்கலை எதிா்த்துப் போராடி வருகிறோம். தனியாா்மய நடவடிக்கையை எதிா்த்து முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி சட்டப் பேரவையில் தீா்மானம் நிறைவேற்றினாா்.

ஆனால், தற்போதைய என்.ஆா்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி அரசு, மத்திய அரசின் தனியாா்மய கொள்கைக்கு ஆதரவாகவும், பொதுமக்களின் கருத்துகளைக் கேட்காமல் தன்னிச்சையாகவும் முடிவெடுத்து, மின் துறையைத் தனியாா்மயமாக்கும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. சம்பிரதாயத்துக்காக ஊழியா்களிடம் கருத்துகளைக் கேட்பதாக அறிக்கை அனுப்பியுள்ளனா். இது ஒட்டுமொத்த புதுவை மக்களின் போராட்டம் என்பதை உணர வேண்டும்.

மின் நுகா்வோா்களின் பொதுச் சொத்தான புதுவை மின் துறையைத் தனியாா்மயமாக்குவது ஏற்புடையதல்ல. தனியாருக்குச் சென்றால் பெரும் பாதிப்புகள் ஏற்படும் என்பதால், அதைக் கைவிட வேண்டும் வேண்டும் என்றனா்.

பணிகள் பாதிப்பு: இதேபோல, காரைக்கால், மாஹே மின் துறை அலுவலகப் பொறியாளா்களும், ஊழியா்களும் புதன்கிழமை பணிகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால், மின் கட்டண மையங்கள் மூடப்பட்டதோடு, கட்டணம் வசூலிப்பு, பழுது நீக்கம், பராமரிப்பு உள்ளிட்ட வழக்கமான சேவைப் பணிகள் பாதிக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com