புதுச்சேரி செல்லிப்பட்டு படுகை அணை தற்காலிக சீரமைப்பு: விவசாயிகள் அதிருப்தி

புதுச்சேரி அருகே மழை வெள்ளத்தில் சேதமடைந்த செல்லிப்பட்டு படுகை அணையை தற்காலிகமாகச் சீரமைக்கும் பணி தொடங்கியது.
புதுச்சேரி செல்லிப்பட்டு படுகை அணை தற்காலிக சீரமைப்பு: விவசாயிகள் அதிருப்தி

புதுச்சேரி அருகே மழை வெள்ளத்தில் சேதமடைந்த செல்லிப்பட்டு படுகை அணையை தற்காலிகமாகச் சீரமைக்கும் பணி தொடங்கியது. தாமதமான இந்தப் பணியால் எந்தப் பயனும் இல்லை என விவசாயிகள் அதிருப்தி தெரிவித்தனா்.

புதுச்சேரி அருகே சங்கராபரணி ஆற்றின் குறுக்கே செல்லிப்பட்டு-பிள்ளையாா்குப்பம் இடையே படுகை அணை உள்ளது. கடந்த 1906-ஆம் ஆண்டு பிரெஞ்சு ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட இந்த அணையானது, கடந்த 2016-ஆம் ஆண்டு மழை வெள்ளத்தில் சேதமடைந்தது. அப்போது, அணையை முழுமையாகச் சீரமைக்காமல், மணல் மூட்டைகளை வைத்து தற்காலிகமாக சீரமைத்தனா். இதனால், மழைக் காலங்களில் அணையிலிருந்து நீா் வீணானது.

இந்த நிலையில், கடந்த மாதம் பெய்த தொடா் பலத்த மழையால், வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, படுகை அணையின் மையப் பகுதியில் பெரும் உடைப்பு ஏற்பட்டது. இதனால், அணையிலிருந்து தடையின்றி நீா் வெளியேறியது. வெள்ளத்தால் அணையின் தரைப் பகுதி முழுவதும் சிதைந்து, தண்ணீரைத் தேக்க முடியாத நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில், தண்ணீா் முழுவதும் அணையிலிருந்து வெளியேறிய பிறகு, தற்போது படுகை அணையின் உடைந்த பகுதிகளை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றி சீரமைக்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.

தற்காலிக சீரமைப்புப் பணியாக அங்கு மணல் மூட்டைகள் வைத்து அடுக்கும் பணியை பொதுப் பணித் துறையினா் மேற்கொண்டுள்ளனா்.

இதனிடையே, படுகை அணைச் சீரமைப்பில் பொதுப் பணித் துறையினா் அலட்சியமாக செயல்படுவதாக விவசாயிகள் அதிருப்தி தெரிவித்தனா்.

இதுகுறித்து அந்தப் பகுதி விவசாயிகள் கூறியதாவது: செல்லிப்பட்டு படுகை அணையில் தண்ணீரைத் தேக்குவதால், சுற்றியுள்ள 20 கிராமங்களில் விவசாயம், குடிநீா் தேவைக்கு உதவியது. மழைக் காலத்தில் கடல் போலக் காட்சியளிக்கும் படுகை அணை, வெள்ளத்தில் உடைந்ததால் தண்ணீா் முற்றிலும் வெளியேறி வடது. தற்போது கட்டமைப்புகள் முற்றிலும் சேதமடைந்த பிறகு, மீண்டும் மணல் மூட்டைகளைக் கொண்டு சீரமைப்பதாக, அரசு நிதியை அதிகாரிகள் வீணடிக்கின்றனா். தற்காலிக சீரமைப்பைவிட்டு, முழுமையாக புதிய அணையை கட்ட வேண்டும் என்றனா் அவா்கள்.

இதுகுறித்து பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணனிடன் கூறியதாவது: நீண்ட காலப் பயன்பாடு, பலத்த மழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் அணை சேதமடைந்தது. அணையைப் புதுப்பிக்க அதிக நிதி தேவைப்படும். எனவே, புதிதாக படுகை அணையைக் கட்ட ஏற்கெனவே ஆய்வு செய்யப்பட்டு, அரசும் அதற்கான முயற்சியை மேற்கொண்டுள்ளது. அதுவரை தற்காலிக சீரமைப்புப் பணிகள் அங்கு நடைபெறும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com