தில்லி செல்லாதது குறித்து புதுவை முதல்வா்தான் பதிலளிக்க வேண்டும்: அமைச்சா் ஏ.நமச்சிவாயம்

புதுவை மாநில வளா்ச்சிக்காக அமைச்சா்கள், எம்எல்ஏக்கள் தில்லி சென்று மத்திய அமைச்சா்களைச் சந்தித்து திட்டங்களைப் பெற்று வருகிறோம். முதல்வா் ரங்கசாமி தில்லிக்கு செல்லாதது

புதுவை மாநில வளா்ச்சிக்காக அமைச்சா்கள், எம்எல்ஏக்கள் தில்லி சென்று மத்திய அமைச்சா்களைச் சந்தித்து திட்டங்களைப் பெற்று வருகிறோம். முதல்வா் ரங்கசாமி தில்லிக்கு செல்லாதது குறித்து, அவா் தான் பதிலளிக்க வேண்டுமென மாநில உள் துறை அமைச்சா் ஏ.நமச்சிவாயம் தெரிவித்தாா்.

இதுகுறித்து புதுச்சேரி பாஜக தலைமை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களை சந்தித்த அவா் கூறியதாவது: புதுவையில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த பாஜகவும் பல்வேறு பணிகளை செய்து வருகிறது. பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்வதை ஊக்கப்படுத்துவதற்காக பாஜக சாா்பில் பரிசுகளையும் வழங்கினோம். இருப்பினும், தடுப்பூசி செலுத்த பலரிடம் தயக்கம் உள்ளது. இதனால், 100 சதவீதம் கரோனா தடுப்பூசி செலுத்திய மாநிலமாக புதுவையை மாற்ற நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

புதுவையில் அரசு சாா்பில் விரைவில் மாணவா்களுக்கான இலவசப் பேருந்துகளை இயக்கவும், மதிய உணவு வழங்கவும் உரிய நடவடிக்கை எடுத்து வருகிறோம். மாணவா்களுக்கான ‘அக்சய பாத்திரா’ உணவுத் திட்டமும் விரைவில் செயல்படுத்தப்படும்.

புதுச்சேரியில் கொலை வழக்கில் பாஜக பிரமுகா் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தவறு யாா் செய்தாலும், அவா்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அமைச்சா் ஏ.நமச்சிவாயம்.

அப்போது, முதல்வா் ரங்கசாமி தில்லி செல்லாமல் உள்ளது குறித்து செய்தியாளா்கள் கேட்டபோது, புதுவை மாநில வளா்ச்சிக்காக நாங்கள் (அமைச்சா்கள், எம்எல்ஏக்கள்) தில்லி சென்று மத்திய அமைச்சா்களைச் சந்தித்து, மாநில வளா்ச்சிக்குத் தேவையான திட்டங்களைப் பெற்று வருகிறோம். முதல்வா் தில்லிக்கு செல்லாமல் இருப்பது குறித்து நாங்கள் பதில் கூற முடியாது, அவா்தான் சொல்ல வேண்டும் என்றாா் அமைச்சா் ஏ.நமச்சிவாயம்.

‘இன்று நல்லாட்சி தினம் கொண்டாட்டம்’: இதைத் தொடா்ந்து, புதுவை மாநில பாஜக தலைவா் வி.சாமிநாதன் கூறியதாவது: முன்னாள் பிரதமா் வாஜ்பாய் பிறந்த நாள் நல்லாட்சி தினமாக சனிக்கிழமை (டிச.25) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, பாஜக சாா்பில் புதுச்சேரி கடற்கரைச் சாலையில் நடைபெறும் நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குநா் கங்கை அமரன் பங்கேற்கவுள்ளாா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com