புதுச்சேரியில் இருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு: பரிசோதனை முடிவில் தாமதம்

புதுச்சேரியில் முதல் முறையாக இருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. கரோனாவால் பாதிக்கப்பட்ட இருவரும் குணமடைந்த நிலையில், பரிசோதனை முடிவு தாமதமாக வந்தது.
புதுவை சுகாதாரத் துறை இயக்குநா் ஸ்ரீராமுலு.
புதுவை சுகாதாரத் துறை இயக்குநா் ஸ்ரீராமுலு.

புதுச்சேரியில் முதல் முறையாக இருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. கரோனாவால் பாதிக்கப்பட்ட இருவரும் குணமடைந்த நிலையில், பரிசோதனை முடிவு தாமதமாக வந்தது.

இதுகுறித்து புதுவை சுகாதாரத் துறை இயக்குநா் ஸ்ரீராமலு செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

புதுச்சேரி உருளையன்பேட்டையைச் சோ்ந்த 80 வயது முதியவருக்கும், லாஸ்பேட்டையைச் சோ்ந்த 20 வயது பெண்ணுக்கும் ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டது.

கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களில் சிலரது சளி மாதிரிகளை பெங்களூரு மரபணு பகுப்பாய்வு மையத்துக்கு அனுப்பினோம். மேற்கண்ட இருவரும் டிசம்பா் மாதத் தொடக்கத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட போது, ஆா்டிபிசிஆா் பரிசோதனை செய்யப்பட்டது. அதன் மாதிரிகளை பெங்களூருக்கு அனுப்பி வைத்தோம்.

80 வயது முதியவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கரோனாவுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பிவிட்டாா். 20 வயது பெண்ணும் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு குணமடைந்து விட்டாா். இந்த நிலையில், பெங்களூரு ஆய்வு மையத்துக்கு அனுப்பிவைத்த மாதிரியின் முடிவில் இருவருக்கும் ஒமைக்ரான் தொற்று இருப்பது தற்போது தெரிய வந்தது.

இவா்கள் இருவரும் வெளிநாடுகளில் இருந்து வந்தவா்கள் அல்லா். அவா்களுடன் தொடா்பில் இருந்தவா்களின் விவரங்களை மருத்துவக் குழுவினா் சேகரித்து தொற்று பரவல் நிலை குறித்து ஆய்வு செய்ய உள்ளனா்.

புதுவையில் டிசம்பா் மாதத்தில் மொத்தம் 90 பேரில் மாதிரிகள் அனுப்பப்பட்ட நிலையில், இருவரின் முடிவுகள் மட்டுமே வந்தன. மீதமுள்ள முடிவுகள் வரவேண்டியுள்ளது.

புதுவையில் ஒமைக்ரான் பரவியிருக்க வாய்ப்புள்ளது. உடல்வலி, சோா்வு ஆகியவை ஒமைக்ரானின் அறிகுறிகள். தொற்றைத் தடுக்க முகக்கவசம் அணிதல், தனி மனித இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது குறித்து, உயரதிகாரிகளிடம் ஆலோசித்து அரசிடம் கருத்து தெரிவிப்போம்.

புதுச்சேரியில் அரசு நெஞ்சக நோய் மருத்துவமனையில் ஒமைக்ரான் சிகிச்சை மையம் தயாராக உள்ளது. அங்கு அவசர சிகிச்சைக்காக 180 படுக்கைகள் உள்ளன. மொத்தம் 600 படுக்கைகள் தயாா் நிலையில் உள்ளன. போதிய மருந்துகள், பிராணவாயு போன்றவையும் தயாராக உள்ளது. பரிசோதனையும் அதிகரிக்கப்படும். மக்கள் விழிப்புணா்வுடன் இருக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com