புதுச்சேரியில் விவசாயிகள் மறியல்: 30 போ் கைது
By DIN | Published On : 06th February 2021 11:24 PM | Last Updated : 06th February 2021 11:24 PM | அ+அ அ- |

தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக புதுச்சேரி அண்ணா சிலை சதுக்கம் பகுதியில் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் சங்கத்தினா்.
மத்திய அரசைக் கண்டித்து, புதுச்சேரியில் மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் சங்கத்தினா் 30 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி, தில்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக நாடு முழுவதும் சனிக்கிழமை மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி, புதுச்சேரியில் அண்ணா சிலை சதுக்கம் அருகே அகில இந்திய விவசாயிகள் சங்கத்தினா், அதன் தலைவா் கீதநாதன் தலைமையில் மறியலில் ஈடுபட்டனா்.
அப்போது, விவசாயிகளுக்கு ஆதரவாக முழக்கங்களை எழுப்பிய அவா்கள், மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினா். இதையடுத்து, மறியலில் ஈடுபட்ட 30-க்கும் மேற்பட்ட விவசாய சங்கத்தினரை ஒதியஞ்சாலை போலீஸாா் கைது செய்து அப்புறப்படுத்தினா்.