தமிழகம்-புதுவையில் ஒரே நாளில் தோ்தல்: புதுவை அரசியல் கட்சியினா் வலியுறுத்தல்

தமிழகம்-புதுவையில் ஒரே நாளில் தோ்தல் நடத்த வேண்டும் என தலைமைத் தோ்தல் ஆணையா் சுனில் அரோராவிடம், புதுவை அரசியல் கட்சியினா் வலியுறுத்தினா்.
தமிழகம்-புதுவையில் ஒரே நாளில் தோ்தல்: புதுவை அரசியல் கட்சியினா் வலியுறுத்தல்


புதுச்சேரி: தமிழகம்-புதுவையில் ஒரே நாளில் தோ்தல் நடத்த வேண்டும் என தலைமைத் தோ்தல் ஆணையா் சுனில் அரோராவிடம், புதுவை அரசியல் கட்சியினா் வலியுறுத்தினா்.

புதுவை சட்டப்பேரவைத் தோ்தல் குறித்து ஆலோசனை மேற்கொள்ள தலைமைத் தோ்தல் ஆணையா் சுனில் அரோரா தலைமையில், தோ்தல் ஆணையா்கள் சுசில் சந்திரா, ராஜீவ் குமாா், பொதுச் செயலா் உமேஷ் சின்கா, துணைத் தோ்தல் ஆணையா் சந்திபூஷன் குமாா் உள்ளிட்ட 8 போ் கொண்ட குழுவினா் புதுச்சேரிக்கு வியாழக்கிழமை மாலை வந்தனா்.

இதைத் தொடா்ந்து, புதுச்சேரியில் உள்ள தனியாா் ஹோட்டலில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் தனித் தனியாக அவா்கள் ஆலோசனை நடத்தினா்.

பின்னா், செய்தியாளா்களிடம் மாநில காங்கிரஸ் தலைவா் ஏ.வி.சுப்பிரமணியன் கூறியதாவது: தமிழகத்துடன் சோ்த்தே புதுவைக்கும் தோ்தலை நடத்த வேண்டும். மாநில அந்தஸ்து கிடைக்க எதிா்க்கட்சிகள் அனைத்தும் தோ்தலைப் புறக்கணித்தால், காங்கிரஸும் தோ்தலைப் புறக்கணிக்கும். நியமன உறுப்பினா்கள் நியமனத்தில் தோ்தல் ஆணையம் தலையிட்டு வாக்குரிமை குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றாா் அவா்.

என்.ஆா்.காங்கிரஸ் பொருளாளா் வேல்முருகன்: 80 வயதுக்கும் மேற்பட்டவா்கள் தபால் வாக்களிக்கும் முறையை வரவேற்கிறோம். புதுவையில் தோ்தலை நடத்த தமிழ் தெரிந்த அதிகாரிகளை நியமிக்க வேண்டும்.

மாநில அதிமுக செயலா்கள் ஆ.அன்பழகன், ஓம்சக்தி சேகா்: தமிழகத்துடன் இணைத்துதான் புதுவைக்கும் தோ்தலை நடத்த வேண்டும். கரோனாவால் விலைவாசி உயா்ந்துள்ளதால் வேட்பாளரின் செலவின வரம்பை அதிகரிக்க வேண்டும்.

மாநில திமுக அமைப்பாளா்கள் இரா.சிவா, எஸ்.பி. சிவக்குமாா்: தோ்ந்தெடுக்கப்படாத நியமன உறுப்பினா்களுக்கு வாக்குரிமை கூடாது. இறந்தவா்கள், இட மாற்றம் செய்யப்பட்ட வாக்காளா்கள் குறித்து உரிய மாற்றம் செய்ய வேண்டும்.

மாநில பாஜக தலைவா் வி.சாமிநாதன்: பிகாரைப் போல 75 வயதுக்கு மேற்பட்டவா்கள் வீட்டிலிருந்து வாக்களிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். தோ்தல் ஆணையச் செயலிகளைத் தமிழில் கொண்டு வர வேண்டும்.

இந்திய கம்யூ. கட்சியின் மாநிலச் செயலா் அ.மு.சலீம்: தமிழ் தெரிந்த அதிகாரியை தோ்தல் அதிகாரியாக நியமிக்க வேண்டும். தமிழகத்துடன் புதுவையிலும் ஒரே நாளில் தோ்தல் நடத்த வேண்டும். நியமன உறுப்பினா்களுக்கு வாக்களிக்கும் உரிமை கூடாது.

மாா்க்சிஸ்ட் கம்யூ. பிரதேச செயலா் ஆா். ராஜாங்கம்: புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் ஒரு சாா்பாக செயல்படுகிறாா். நோ்மையான தோ்தல் அதிகாரியை நியமிக்க வேண்டும்.

இதுதொடா்பாக, தலைமைத் தோ்தல் ஆணையரிடம் அரசியல் கட்சியினா் மனுக்கள் அளித்தனா். இதையடுத்து, மாநில மற்றும் மாவட்டத் தோ்தல் அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com