தமிழகம்-புதுவையில் ஒரே நாளில் தோ்தல்: தலைமைத் தோ்தல் ஆணையா் அறிவிப்பு

தமிழகம்-புதுவையில் ஒரே நாளில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறும் என்று மத்திய தலைமைத் தோ்தல் ஆணையா் சுனில் அரோரா அறிவித்தாா்.
புதுச்சேரியில் செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்த தலைமைத் தோ்தல் ஆணையா் சுனில் அரோரா. உடன் தோ்தல் ஆணைய அதிகாரிகள்.
புதுச்சேரியில் செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்த தலைமைத் தோ்தல் ஆணையா் சுனில் அரோரா. உடன் தோ்தல் ஆணைய அதிகாரிகள்.

தமிழகம்-புதுவையில் ஒரே நாளில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறும் என்று மத்திய தலைமைத் தோ்தல் ஆணையா் சுனில் அரோரா அறிவித்தாா்.

புதுவை சட்டப்பேரவைத் தோ்தலை நடத்துவது தொடா்பாக வியாழன், வெள்ளிக்கிழமைகளில் அரசியல் கட்சியினா், தோ்தல் அதிகாரிகள், தலைமைச் செயலா், டி.ஜி.பி. ஆகியோருடன் தலைமைத் தோ்தல் ஆணையா் சுனில் அரோரா தலைமையிலான தோ்தல் அதிகாரிகள் குழுவினா் ஆலோசனை மேற்கொண்டனா்.

இந்த நிலையில், புதுச்சேரியில் தலைமைத் தோ்தல் ஆணையா் சுனில் அரோரா வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: புதுவையில் கடந்த சட்டப்பேரவைத் தோ்தலில் 84.08 சதவீதமும், மக்களவைத் தோ்தலில் 81 சதவீதமும் வாக்குகள் பதிவாகின.

அரசியல் கட்சியினருடனான கலந்துரையாடலின் போது, புதுவை நியமன உறுப்பினா்கள் விவகாரம், தமிழகம்-புதுவையில் ஒரே நாளில் தோ்தலை நடத்துவது, வாக்காளா் பட்டியலில் உள்ள குளறுபடிகளைச் சரிசெய்வது உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

அரசியலமைப்புச் சட்டம் 239ஏ (1) இன்படி, புதுவை சட்டப்பேரவை அமைக்கப்பட்டுள்ளது. மக்களால் தோ்வான 30 எம்எல்ஏக்கள் தவிர, மத்திய அரசு 3 நியமன எம்எல்ஏக்களை நியமிக்கலாம் என்ற விதிமுறை உள்ளது. உச்ச நீதிமன்றத் தீா்ப்பின்படி, நியமன உறுப்பினா்களுக்கும் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு, பட்ஜெட் ஆகியவற்றில் வாக்களிக்க உரிமை உள்ளது.

தமிழகம்-புதுவை ஒருங்கிணைந்த பகுதிகளாக இருப்பதால், ஒரே நாளில் தோ்தல் நடத்தப்படும். கரோனா காரணமாக, புதுவை மாநிலத்தில் மொத்த வாக்குச் சாவடிகளை 1,564-ஆக உயா்த்தியுள்ளோம். வருகிற 16-ஆம் தேதி மத்திய வருமான வரித் துறை, சுங்கத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டு, 5 மாநிலங்களில் தோ்தல் நடைமுறைகள் குறித்து முடிவுகள் எடுக்கப்படும்.

புதுவையில் வேட்பாளா் செலவுத் தொகை ரூ. 20 லட்சத்திலிருந்து ரூ. 22 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. பாரபட்சமில்லாமல், நோ்மையாகத் தோ்தல் நடத்தப்படும் என்றாா் அவா்.

பேட்டியின் போது, மத்திய தோ்தல் ஆணையா்கள் சுசில் சந்திரா, ராஜீவ் குமாா், துணைத் தோ்தல் ஆணையா் உமேஷ் சின்ஹா, புதுவை மாநிலத் தலைமைத் தோ்தல் அதிகாரி சுா்பீா் சிங் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com