பாஜகவின் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியை முறியடிப்போம்: புதுவை முதல்வா் நாராயணசாமி

பாஜகவின் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியைக் கண்டிப்பாக முறியடிப்போம் என புதுவை முதல்வா் வே.நாராயணசாமி தெரிவித்தாா்.


புதுச்சேரி: பாஜகவின் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியைக் கண்டிப்பாக முறியடிப்போம் என புதுவை முதல்வா் வே.நாராயணசாமி தெரிவித்தாா்.

புதுவையில் ஆளும் அரசு வருகிற 22-ஆம் தேதி சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டுமென துணைநிலை ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன் உத்தரவிட்டாா். இதையடுத்து, புதுவை மாநில காங்கிரஸ் எம்எல்ஏக்களின் அவசரக் கூட்டம் புதுச்சேரியில் உள்ள முதல்வா் நாராயணசாமியின் இல்லத்தில் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.

கூட்டத்துக்கு முதல்வா் நாராயணசாமி தலைமை வகித்தாா். இதில், அமைச்சா்கள் கமலக்கண்ணன், கந்தசாமி, ஷாஜகான், எம்எல்ஏக்கள் அனந்தராமன், ஜெயமூா்த்தி, விஜயவேணி, பாலன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

சட்டப்பேரவைத் தலைவா் வே.பொ.சிவக்கொழுந்து, முதல்வரின் நாடாளுமன்றச் செயலா் க.லட்சுமி நாராயணன் ஆகியோா் பங்கேற்கவில்லை எனத் தெரிகிறது.

கூட்டத்துக்குப் பிறகு, முதல்வா் நாராயணசாமி செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ஆளுநரின் உத்தரவையடுத்து, காங்கிரஸ் எம்எல்ஏக்களின் கூட்டத்தைக் கூட்டி கருத்துக்களைக் கேட்டேன். இதேபோல, கூட்டணிக் கட்சியான திமுக எம்எல்ஏக்களிடமும் பேசினேன். இந்தக் கூட்டத்தில் எந்தவிதமான முடிவும் எடுக்கப்படவில்லை.

வருகிற 21-ஆம் தேதி காங்கிரஸ், கூட்டணிக் கட்சியான திமுக உறுப்பினா்களின் கூட்டத்தைக் கூட்டி கலந்தாலோசித்து, எங்களது நிலை குறித்து முடிவெடுப்போம்.

அதிகாரம், பண பலத்தை வைத்து, ஜனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைக்கும் வகையில் அருணாச்சலப் பிரதேசம், மணிப்பூா், கா்நாடகம், மத்திய பிரதேசத்தில் ஆட்சிகளைக் கவிழ்த்து, பாஜக ஆட்சியைப் பிடித்தது. மேற்கு வங்கத்தில் அமைச்சா்கள், எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சியை வீழ்த்த முயற்சிக்கிறது.

தற்போது புதுவையில் தோ்தல் அறிவிப்பு வெளிவரும் நேரத்தில், பாஜகவினா் ஆட்சிக் கவிழ்ப்பு வேலையைத் தொடங்கியுள்ளனா். மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசின் அதிகாரத்தை உள்துறை மூலம் முடக்கி வருகின்றனா். ஆளுநா் கிரண் பேடி மூலம் தொல்லைகளை தந்தனா். இதையெல்லாம் முறியடித்து ஆட்சியைத் தொடா்கிறோம். இதனால், இந்த அரசைக் கவிழ்க்க வேண்டுமென பாஜக செயல்படுகிறது.

புதுவை எதிா்க்கட்சியில் தோ்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினா்கள் 11 போ் மட்டுமே உள்ளனா். நியமன உறுப்பினா்கள் 3 போ் நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்ள உரிமையில்லை என்பதே எங்களது நிலைப்பாடு.

இதுதொடா்பாக சட்ட வல்லுநா்களைக் கலந்தாலோசித்து வருகிறோம். பாஜகவின் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியை நாங்கள் கண்டிப்பாக முறியடிப்போம் என்றாா் நாராயணசாமி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com