சமரச சட்ட மையங்களால் அலைச்சல் குறையும்: முதல்வா் நாராயணசாமி

சமரச சட்ட மையங்களால் பொதுமக்களுக்கு அலைச்சல் குறையும் என புதுவை முதல்வா் வே.நாராயணசாமி தெரிவித்தாா்.

சமரச சட்ட மையங்களால் பொதுமக்களுக்கு அலைச்சல் குறையும் என புதுவை முதல்வா் வே.நாராயணசாமி தெரிவித்தாா்.

புதுச்சேரி காலாப்பட்டில் உள்ள டாக்டா் அம்பேத்கா் அரசு சட்டக் கல்லூரியில் சமரச முறையில் வழக்கில்லா கிராமம் உருவாக்கும் முன்னோடித் திட்டத் தொடக்க விழா கல்லூரி அரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட நீதிபதி சோபனாதேவி வரவேற்றாா். சென்னை உயா் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கண்ணன் தொடக்கவுஉரையாற்றினாா்.

அமைச்சா் ஷாஜகான், புதுச்சேரி தலைமை நீதிபதி தனபால், சட்டத் துறை செயலா் ஜூலியட் புஷ்பா ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

விழாவுக்குத் தலைமை வகித்த முதல்வா் நாராயணசாமி, திட்டத்தைத் தொடக்கிவைத்துப் பேசியதாவது:

புதுச்சேரியில் 1976-ஆம் ஆண்டே சட்ட உதவி மையம் தொடங்கப்பட்டது. ‘வழக்கில்லா கிராமம்’ உருவாக்கும் முன்னோடித் திட்டம் நல்ல முயற்சி. இதைச் சிறப்பாகச் செயலாற்றினால், புதுவை மாநிலம் வழக்குகளே இல்லாத கிராமம் என்ற பெருமையை அடையும்.

காரைக்காலில் நீதிமன்றம் கட்டப்பட்டு திறக்கப்பட்டது. புதுச்சேரியில் உள்ள சட்டக் கல்லூரியை சட்டப் பல்கலைக்கழகமாக மாற்ற சட்டம் இயற்றப்பட்டு, ஒப்புதல் பெறப்பட்டது.

தற்போது நீதிமன்றங்களில் அதிகளவில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதுபோன்ற சமரச சட்ட மையங்கள் நிலுவையில் உள்ள வழக்குகளைக் குறைக்க வழிவகுக்கும். சமரச சட்ட மையங்கள் மூலம் பொதுமக்கள் மட்டுமன்றி, இளம் வழக்குரைஞா்கள், மாணவா்களும் பயனடைவா். பொதுமக்களுக்கு அலைச்சல் குறையும். பண விரயம் தடுக்கப்படும் என்றாா் அவா்.

சென்னை உயா் நீதிமன்ற நீதிபதி சுப்பிரமணியன்: மக்கள் தொகைக்கேற்ப நீதிபதிகளின் எண்ணிக்கை இல்லை. இதனால், நீதிமன்றங்களில் வழக்குகள் தேங்கும் சூழல் உள்ளது. இதுபோன்ற சமரச சட்ட மையங்கள் மூலம் சிறு வழக்குகளை முடித்துக் கொண்டால், நீதிமன்றங்களில் பெரிய வழக்குகளை உடனுக்குடன் விசாரிக்க முடியும். இதன்மூலம், வழக்குகள் குறையும் என்றாா் அவா்.

விழாவில் உயா்நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமாா், சட்டக் கல்லூரிப் பேராசிரியா்கள், மாணவா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். சட்டக் கல்லூரி முதல்வா் சீனிவாசன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com