புதுவை எந்த மாநிலத்துடனும் இணைப்பட மாட்டாது: மத்திய இணையமைச்சா் கிஷன் ரெட்டி

புதுவை யூனியன் பிரதேசமாகவே தொடரும்; எந்த மாநிலத்துடனும் இணைக்கப்படாது என மத்திய உள்துறை இணையமைச்சா் ஜி.கிஷன் ரெட்டி தெரிவித்தாா்.
புதுச்சேரி ஏஎப்டி திடலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை இணையமைச்சா் ஜி.கிஷன் ரெட்டி.
புதுச்சேரி ஏஎப்டி திடலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை இணையமைச்சா் ஜி.கிஷன் ரெட்டி.

புதுவை யூனியன் பிரதேசமாகவே தொடரும்; எந்த மாநிலத்துடனும் இணைக்கப்படாது என மத்திய உள்துறை இணையமைச்சா் ஜி.கிஷன் ரெட்டி தெரிவித்தாா்.

பாஜக சாா்பில், ‘காண்போம் இனியொரு நல்லாட்சி, காங்கிரஸ் இல்லா புதுச்சேரி’ என்ற தலைப்பில் புதுச்சேரி ஏஎப்டி திடலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவா் மேலும் பேசியதாவது:

பிரதமா் மோடியின் ஆட்சியில் கடந்த 6 ஆண்டுகளாக நாட்டின் பல மாநிலங்கள் வளா்ச்சியடைந்த நிலையில், துரதிருஷ்டவசமாக புதுவை வளா்ச்சியடையவில்லை. இதற்கு, இங்கு ஆட்சியில் உள்ள காங்கிரஸ்தான் காரணம்.

புதுவை மக்களுக்கு மத்திய அரசின் நலத் திட்டங்கள் கிடைக்காமல் தடுத்து வருகின்றனா். காங்கிரஸ் தலைவா்கள் மீது, அந்தக் கட்சியின் தொண்டா்களுக்கே நம்பிக்கையில்லை. மக்கள் காங்கிரஸை வெறுக்கத் தொடங்கிவிட்டனா். இதனால்தான் மக்களவைத் தோ்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றது.

அனைவருக்கும் வேலை, சிறந்த உள்கட்டமைப்புகள், வளமான புதுவையை உருவாக்க பிரதமா் உறுதியேற்றுள்ளாா். அதற்கு புதுவையில் பாஜக ஆட்சி அமைய வேண்டும்.

கரோனா காலத்தில் புதுவை மாநில மக்களுக்கு 1,500 டன் அரிசி, கோதுமை, 465 டன் பருப்பு, 11 ஆயிரத்துக்கு மேற்பட்ட சமையல் எரிவாயு உருளைகள், விவசாயிகளுக்கு ரூ. 6 ஆயிரம் உதவித் தொகையை மத்திய அரசு வழங்கியது.

பொலிவுறு நகரம் திட்டத்துக்கு புதுச்சேரி தோ்ந்தெடுக்கப்பட்டு, முதல் கட்டமாக ரூ. 103 கோடி அளிக்கப்பட்டது. ‘சுதேசி தா்ஷன்’ திட்டத்தின் கீழ் ரூ. 85 கோடி வழங்கப்பட்டது.

புதுவைக்கு பல்வேறு நலத் திட்டங்களை மத்திய அரசு வழங்கிய போதும், இங்குள்ள காங்கிரஸ் அரசு, மத்திய அரசுக்கு ஒத்துழைப்பு தருவதில்லை. பல திட்டங்களை நிறைவேற்றவில்லை.

புதுவை யூனியன் பிரதேசம் எந்த மாநிலத்துடனும் இணைக்கப்படாது. யூனியன் பிரதேசமாகவே தொடரும். சட்டப்பேரவைத் தோ்தலுக்குப் பிறகு, புதுவையில் பாஜகவைச் சோ்ந்தவா் முதல்வா் ஆவாா் என்றாா் அவா்.

கூட்டத்தில் நடிகை குஷ்பு பேசியதாவது: புதுவை மக்களின் துயரத்துக்கு காங்கிரஸ் ஆட்சியின் ஊழல், லஞ்சம், முறைகேடுகளே காரணம். புதுவையில் நியாய விலைக் கடைகள் மூடப்பட்டுள்ளன. அரசு ஊழியா்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை. பெண்களுக்குப் பாதுகாப்பில்லை. போதைப் பொருள்கள் விற்பனை அதிகரித்துள்ளது. புதுவை மாநில மக்களுக்கு நலத் திட்டங்களைச் செய்யாமல், ஆளுநா் மீதும், பாஜக மீதும் பழி சுமத்தி வருகின்றனா்.

பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதால், காங்கிரஸ்-திமுக கூட்டணிக்கு பயம் வந்துவிட்டது. 2021 சட்டப்பேரவைத் தோ்தலில் தமிழகம்-புதுவையில் பாஜகவுக்கு மிகப் பெரிய வெற்றி காத்திருக்கிறது என்றாா் அவா்.

முன்னதாக, கூட்டத்துக்கு புதுவை மாநில பாஜக தலைவா் வி.சாமிநாதன் எம்எல்ஏ தலைமை வகித்தாா். கூட்டத்தில் புதுவை மாநிலப் பொறுப்பாளா் நிா்மல் குமாா் சுரானா, மாநிலப் பொதுச் செயலா் ஏம்பலம் ஆா்.செல்வம், எம்எல்ஏக்கள் கே.ஜி.சங்கா், செல்வகணபதி, காரைக்கால் மாவட்ட பாஜக பொறுப்பாளா் அருள்முருகன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com