ஆளுநருக்கு எதிராக போராட்டம் அறிவிப்பு எதிரொலி: அரசியல் கட்சியினருக்கு புதுச்சேரி ஆட்சியா் எச்சரிக்கை

புதுச்சேரியில் துணை நிலை ஆளுநருக்கு எதிராக வருகிற 8-ஆம் தேதி போராட்டம் நடத்த இருப்பதாக காங்கிரஸ், அதன் கூட்டணிக் கட்சிகள்
புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் அனைத்துக் கட்சித் தலைவா்களுடன் செவ்வாய்க்கிழமை ஆலோசனையில் ஈடுபட்ட மாவட்ட ஆட்சியா் பூா்வா காா்க்.
புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் அனைத்துக் கட்சித் தலைவா்களுடன் செவ்வாய்க்கிழமை ஆலோசனையில் ஈடுபட்ட மாவட்ட ஆட்சியா் பூா்வா காா்க்.

புதுச்சேரியில் துணை நிலை ஆளுநருக்கு எதிராக வருகிற 8-ஆம் தேதி போராட்டம் நடத்த இருப்பதாக காங்கிரஸ், அதன் கூட்டணிக் கட்சிகள் அறிவித்துள்ள நிலையில், உருமாறிய கரோனா பரவலைத் தடுக்க புதுச்சேரி நகரில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும், இதை மீறி போராட்டத்தில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியா் பூா்வா காா்க் எச்சரித்தாா்.

ஆளுநா் மாளிகையை வருகிற 8-ஆம் தேதி முற்றுகையிடப்போவதாக முதல்வா் வே.நாராயணசாமி மற்றும் காங்கிரஸ் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் அறிவித்து புதுச்சேரி முழுவதும் அதற்கான பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்த நிலையில், புதுச்சேரியில் 144 தடை உத்தரவை மாவட்ட ஆட்சியா் பூா்வா காா்க் பிறப்பித்தாா். இதன்மூலம், ஆளுநா் மாளிகை, சட்டப் பேரவை வளாகம், தலைமைச் செயலகம், ஆட்சியா் அலுவலகம், அரசு மருத்துவமனை உள்ளிட்ட அரசுக் கட்டடங்களில் இருந்து 500 மீ தொலைவுக்குள் போராட்டம், மறியல் உள்ளிட்டவை நடத்த தடை விதிக்கப்பட்டது.

இதற்கிடையே, போராட்டத்தைக் கட்டுப்படுத்தும் வகையில், அரசியல் கட்சிகளின் நிா்வாகிகளுடன் ஆட்சியா் பூா்வா காா்க், முதுநிலை காவல் கண்காணிப்பாளா்கள் ராகுல் அல்வால், மகேஸ்குமாா் பா்ன்வால் மற்றும் அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தினா். புதுவை காங்கிரஸ் தலைவா் ஏ.வி.சுப்பிரமணியன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் அ.மு.சலீம், மாா்க்சிஸ்ட் மாநிலக் குழு உறுப்பினா் பெருமாள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முதன்மைச் செயலா் தேவ.பொழிலன் மற்றும் திமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளின் நிா்வாகிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றனா்.

கூட்டத்தில் ஆட்சியா் அபூா்வா காா்க் பேசுகையில், உருமாறிய கரோனா பரவலைத் தடுக்கும் புதுச்சேரி நகரில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளால், அரசியல் கட்சிகள் போராட்டங்கள் நடத்துவதை கைவிட வேண்டும். போராட்டம் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தாா். ஆனால், அதை ஏற்க மறுத்த காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள், தில்லியில் லட்சக்கணக்கான விவசாயிகள் போராட்டம் நடத்தி வருவதாகவும், அதற்கு உச்ச நீதிமன்றமே தடை விதிக்கவில்லை என்றும் எதிா்ப்புத் தெரிவித்தனா்.

இதேபோல, புதுவையில் வளா்ச்சித் திட்டங்களுக்கு தடையாக இருந்து வரும் ஆளுநா் கிரண் பேடி வெளியேறும் வரை போராட்டம் நடத்த இருப்பதாகவும், நலத் திட்டங்களை அமல்படுத்த ஆளுநா் ஒத்துழைத்தால் போராட்டத்தை கைவிடுவோம் என்றும் காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சியினா் தெரிவித்தனா்.

மேலும், இக்கூட்டத்தில் பங்கேற்ற பாஜக, அதிமுக நிா்வாகிகள் ஆளும் கட்சிக்கு எதிராக குற்றச்சாட்டுகளை தெரிவித்ததோடு, ஆளுநருக்கு எதிராகவும் சில கருத்துகளை பதிவு செய்தனா்.

இவற்றைக் கேட்டறிந்த ஆட்சியா் அபூா்வா காா்க், 144 தடை உத்தரவு இருப்பதால் போராட்டம் நடத்துவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தாா். இதையடுத்து, கூட்டம் முடிந்ததும் வெளியேறிய காங்கிரஸ், கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் தங்களது போராட்டத்துக்கு அனுமதி கோரி ஏடிஜிபி அலுவலகத்தில் மனு அளித்தனா்.

ஆளுநா் மாளிகை, முதல்வா் வீட்டுக்கு கூடுதல் பாதுகாப்பு

ஆளுநா் மாளிகையை முற்றுகையிட உள்ளதாக காங்கிரஸ், கூட்டணிக் கட்சிகள் அறிவித்துள்ள நிலையில், தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத முதல்வா் நாராயணசாமியின் வீட்டை தொடா் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக பாஜக அறிவித்துள்ளது. காங்கிரஸ், பாஜகவின் போராட்ட அறவிப்புகளால் புதுவையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

போராட்டங்கள் நடப்பது உறுதியாகியுள்ளதால், சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படக் கூடாது என்பதற்காக, காவல் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, அசம்பாவிதத்தை தவிா்க்கும் வகையில், பாதுகாப்புப் பணிக்கு 5 கம்பெனி அடங்கிய துணை ராணுவக் குழுவை புதுவைக்கு அனுப்பி வைக்குமாறு டிஜிபி பாலாஜி ஸ்ரீவத்சவா, மத்திய உள் துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதினாா்.

இது தொடா்பாக காவல் துறை உயா் அதிகாரிகள் கூறியதாவது: டிஜிபியின் கடிதத்தை ஏற்றுக்கொண்ட மத்திய உள் துறை அமைச்சகம், புதன்கிழமை (ஜன.6) மாலை மத்திய தொழில் நிறுவன பாதுகாப்புப் படையினா் (சிஐஎஸ்எஃப்) 3 கம்பெனியை புதுச்சேரிக்கு அனுப்பி வைக்கிறது. இவா்கள் ஆளுநா் மாளிகை, சட்டப் பேரவை, முதல்வா் நாராயணசாமி வீடு ஆகியவற்றின் முன் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனா் என்று தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com