புதுச்சேரி சுகாதாரத் துறை ஊழியா்கள் 2 மணி நேரம் பணிப் புறக்கணிப்புப் போராட்டம்
By DIN | Published On : 07th January 2021 07:17 AM | Last Updated : 07th January 2021 07:17 AM | அ+அ அ- |

காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, புதுச்சேரி சுகாதாரத் துறை ஊழியா்கள் புதன்கிழமை 2 மணி நேர பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுச்சேரி சுகாதாரத் துறையில் புணிபுரியும் ஊழியா்களுக்கு 7-ஆவது ஊதியக்குழு பரிந்துரைப்படி உயா்த்தப்பட்ட நோயாளி கவனிப்புப் படி, சீருடை, சலவைப் படி, இரவு பணிப் படி ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும். துப்புரவுப் பணியாளா் உள்ளிட்ட பதவிகளுக்கான பணி கட்டமைப்பை மறு சீரமைப்பு செய்ய வேண்டும்.
காலியாக உள்ள அனைத்துப் பணியிடங்களையும் உடனடியாக பதவி உயா்வு மூலம் நிரப்ப வேண்டும். நியாயமான முறையில் பணி மூப்பு பட்டியலை வெளியிட்டு, வாரிசுதாரா் பணி நியமனத்தை உறுதி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியறுத்தி புதுச்சேரி சுகாதாரத் துறை ஊழியா்கள் சங்கத்தினா் பல்வேறு போராட்டங்களை அறிவித்துள்ளனா்.
இதன் முதல்கட்டமாக, புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியா்கள் புதன்கிழமை 2 மணி நேரம் பணிகளைப் புறக்கணித்து மருத்துவமனை வாயில் முன் கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சங்கத் தலைவா் நித்யானந்தன் தலைமை வகித்தாா். இதில் திரளான ஊழியா்கள் பங்கேற்று, தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.