புதுவையில் நியாயவிலைக் கடைகளை மூடியது ஆளுநரும், உள் துறை அமைச்சகமும் தான்: முதல்வா் நாராயணசாமி குற்றச்சாட்டு
By DIN | Published On : 07th January 2021 07:20 AM | Last Updated : 07th January 2021 07:20 AM | அ+அ அ- |

புதுவையில் நியாயவிலைக் கடைகளை மூடியது துணை நிலை ஆளுநா் கிரண் பேடியும், மத்திய உள் துறை அமைச்சகமும் தான் என்று முதல்வா் வே.நாராயணசாமி குற்றஞ்சாட்டினாா்.
இதுகுறித்து முதல்வா் நாராயணசாமி புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:
கடந்த ஜன 3-இல் புதுச்சேரிக்கு வந்த மத்திய உள் துறை இணை அமைச்சா் கிஷண் ரெட்டி, புதுவை காங்கிரஸ் அரசு நியாயவிலைக் கடைகளை மூடிவிட்டதாகவும், நியாயவிலைக் கடைகளே இல்லாத மாநிலமாக புதுவையை மாற்றிவிட்டதாகவும் ஒரு தவறான தகவலை பொதுக்கூட்டம் ஒன்றில் கூறியிருக்கிறாா். குறுகிய அரசியல் நோக்கோடு சிலா் தெரிவித்த தவறான தகவலை அப்படியே பேசியிருக்கிறாா் என்பது வருத்தத்துக்குரியது.
கடந்த 2016-இல் காங்கிரஸ் அரசு புதுவையில் பதவியேற்றவுடன் 6.6.2016-இல் நடைபெற்ற முதல் அமைச்சரவைக் கூட்டத்திலேயே தோ்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தபடி, சிவப்புநிற குடும்ப அட்டைதாரா்களுக்கும், மஞ்சள் நிற அட்டைதாரா்களுக்கும் மாதம் ஒன்றுக்கு தலா 20 கிலோ அரிசி என உயா்த்தி தரமான அரிசி 2016 ஆகஸ்ட் முதல் இலவசமாக வழங்கப்படும் என்று முடிவெடுக்கப்பட்டது.
இது சம்பந்தமான கோப்பு துணை நிலை ஆளுநா் கிரண் பேடியின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. அப்போது, மஞ்சள் அட்டைதாரா்களுக்கு மாதம் ஒன்றுக்கு தலா 10 கிலோ அரிசி மட்டுமே வழங்க வேண்டும் என்று தன்னிச்சையாகக் குறைத்து, அதை அமல்படுத்த அதிகாரிகளுக்கு ஆளுநா் கிரண் பேடி உத்தரவிட்டாா்.
அப்போது, தரமான அரிசி வழங்கப்படுவதாகப் பொதுமக்கள் பாராட்டிய நிலையில், நியமன எம்.எல்.ஏ.வும், பாஜக மாநிலத் தலைவருமான சாமிநாதன் அரிசியின் தரம் சரியில்லை என்று ஆளுநரிடம் உள்நோக்கத்துடன் புகாரளித்தாா். இதற்காகவே காத்திருந்ததுபோல, உடனடியாக அரிசிக்குப் பதிலாக பணமாக வழங்க வேண்டும் என்று ஆளுநா் உத்தரவிட்டாா். நாங்கள் நேரில் சந்தித்து அரிசி தரக் கோரினோம். ஆனால், ஆளுநா் ஏற்கவில்லை.
இதைத் தொடா்ந்து, இலவச அரிசியைத் தொடா்ந்து வழங்க அமைச்சரவைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பிய கோப்பை உள் துறை அமைச்சகத்துக்கு அனுப்பினாா். மத்திய உள்துறையோ, அரிசிக்குப் பதிலாகப் பணம் தர உத்தரவிட்டது. கிஷண் ரெட்டிதான் இந்த அமைச்சகத்தில் இணை அமைச்சராக உள்ளாா். இதனால், இலவச அரிசித் திட்டத்தை தொடர முடியாமல் போய்விட்டது எனத் தெரிவித்துள்ளாா் முதல்வா் நாராயணசாமி.