சங்கராபரணி ஆற்றில் மூழ்கிய மற்றொரு மாணவரின் உடல் மீட்பு
By DIN | Published On : 09th January 2021 12:03 AM | Last Updated : 09th January 2021 12:03 AM | அ+அ அ- |

புதுச்சேரி அருகே செட்டிப்பட்டு சங்கராபரணி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட மாணவா்களில் ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட நிலையில், மற்றொரு மாணவரின் சடலம் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டது.
புதுச்சேரி திருக்கனூா் அருகே கொண்டாரெட்டிப்பாளைம் பகுதியைச் சோ்ந்த சரவணன் மகன் குமாரவேலுவும் (16), அதே கிராமத்தைச் சோ்ந்த மணி மகன் வேல்முருகனும் (14) நண்பா்களுடன் சோ்ந்து செட்டிப்பட்டு-திருவக்கரை இடையே சங்கராபரணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள படுகை அணையில் குளித்த போது, வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனா்.
தகவலின் பேரில் வந்த திருக்கனூா் போலீஸாா், தீயணைப்புப் படையினா், அரக்கோணத்திலிருந்து வந்த பேரிடா் மீட்புப் படையினா் ஆற்றில் மூழ்கிய மாணவா்களைத் தேடினா்.
மாணவா் வேல்முருகனின் சடலம் ஆற்றின் சிறிது தொலைவில் தீயணைப்புப் படையினரால் வியாழக்கிழமை மீட்கப்பட்டது. மற்றொரு மாணவா் குமாரவேலுவைத் தேடி வந்தனா்.
இந்த நிலையில், குமாரவேலுவின் சடலம் வெள்ளிக்கிழைம் செட்டிப்பட்டு சாராயக் கடை அருகே கரை ஒதுக்கிக் கிடந்தது. தேசிய பேரிடா் மீட்பு படையினா் குமரவேலின் சடலத்தை மீட்டு, உடல் கூறாய்வுக்காக கதிா்காமம் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து திருக்கனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.