புதுவை விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தொடரும்: முதல்வா் நாராயணசாமி

புதுவையில் விவசாயிகளுக்கான இலவச மின்சாரத் திட்டம் தொடரும் என்று முதல்வா் வே.நாராயணசாமி தெரிவித்தாா்.

புதுவையில் விவசாயிகளுக்கான இலவச மின்சாரத் திட்டம் தொடரும் என்று முதல்வா் வே.நாராயணசாமி தெரிவித்தாா்.

புதுவை அரசு வேளாண் துறை சாா்பில் கடந்த ஆண்டு சொா்ணவாரி பருவ நெல் சாகுபடி செய்த விவசாயிகளுக்கு ஊக்கத் தொகை வழங்கும் விழா, புதுச்சேரி தாவரவியல் பூங்காவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. வேளாண் அமைச்சா் ஆா்.கமலக்கண்ணன் தலைமை வகித்தாா். வேளாண் துறை இயக்குநா் ராமகிருஷ்ணன் (எ) பாலகாந்தி வரவேற்றாா். விழாவில் முதல்வா் நாராயணசாமி கலந்து கொண்டு ஊக்கத்தொகைக்கான காசோலையை வழங்கினாா்.

சொா்ணவாரி 2020-21 பட்டத்தில் 5,518 ஏக்கரில் நெல் பயிா் சாகுபடி செய்த 2,836 பொதுப் பிரிவு விவசாயிகள், 275 அட்டவணைப் பிரிவு விவசாயிகள் என மொத்தம் 3,111 விவசாயிகளுக்கு ஊக்கத்தொகையாக ரூ.2 கோடியே 77 லட்சத்து 18 ஆயிரத்து 800-க்கான காசோலை இந்தியன் வங்கி ரெட்டியாா்பாளையம் கிளை மேலாளரிடம் வழங்கப்பட்டது. இது, விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படவுள்ளது.

விழாவில், முதல்வா் நாராயணசாமி பேசியதாவது: புதுவை மாநிலத்தில் விவசாயிகளுக்கு முன்னுரிமை அளித்து திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன. விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்தை தடுக்கும் விதமாக, மின் விநியோகத்தை மத்திய அரசு தனியாா்மயமாக்க திட்டமிட்டுள்ளது. மத்திய அரசு எத்தகைய முடிவெடுத்து செயல்பட்டாலும், புதுவையில் விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் திட்டம் தொடரும்.

விளைநிலங்களுக்கு காப்புறுதி அளிக்கப்படும் என பிரதமா் மோடி தற்போது அறிவிக்கிறாா். ஆனால், புதுவை அரசு இந்தத் திட்டத்தை ஏற்கெனவே தொடங்கி, முழுமையாக நடைமுறைப்படுத்தி வருகிறது.

விவசாயிகளின் நலனில் அக்கறை செலுத்தும் மாநிலங்களில் இந்தியாவிலேயே புதுவை முதன்மையாக விளங்குகிறது. விவசாயக் கல்லூரி, கால்நடை மருத்துவக் கல்லூரியை இணைத்து பல்கலைக்கழகம் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

நிவா் புயலால் புதுவையில் ரூ.400 கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டதால், முதல் கட்டமாக ரூ.100 கோடி வழங்க வேண்டுமென மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்தோம். ஆனால், துணை நிலை ஆளுநரோ, ரூ.10 கோடி அளவுக்குதான் சேதம் ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசிடம் தெரிவித்தாா். ரூ.400 கோடி கிடைத்தால் விவசாயிகளுக்கு நிவாரணம் அளிக்க முடியும். புதுவையில் விவசாயிகள் கேட்காமலே அரசு உதவிகளைச் செய்துள்ளது என்றாா் முதல்வா் நாராயணசாமி.

விழாவின் நிறைவாக, தில்லி போராட்டத்தில் உயிரிழந்த 61 விவசாயிகளுக்கு 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com