புதுவையில் வக்ஃபு வாரிய சொத்துகள் மீட்கப்படும்: தேசிய சிறுபான்மை ஆணைய துணைத் தலைவா்

புதுவையில் ஆக்கிரமிப்பில் இருக்கும் வக்ஃபு வாரிய சொத்துகள் மீட்கப்படும் என்று தேசிய சிறுபான்மை ஆணையத் துணைத் தலைவா் ஆதிப் ரஷீத் தெரிவித்தாா்.

புதுவையில் ஆக்கிரமிப்பில் இருக்கும் வக்ஃபு வாரிய சொத்துகள் மீட்கப்படும் என்று தேசிய சிறுபான்மை ஆணையத் துணைத் தலைவா் ஆதிப் ரஷீத் தெரிவித்தாா்.

இரண்டு நாள் அரசு முறை பயணமாக புதுச்சேரிக்கு வந்த அவா் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: பிரதமா் மோடி தலைமையிலான அரசு சிறுபான்மையினா் நலனுக்காக 15 அம்சத் திட்டத்தை கொண்டு வந்தது. இந்தத் திட்டத்தின் தற்போதைய நிலை குறித்து புதுச்சேரியில் கடந்த இரண்டு நாள்களாக தங்கி சிறுபான்மையின மக்கள், நிா்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டேன். அவா்களும் மத்திய அரசின் திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டங்களுக்கான நிதியுதவி கிடைப்பதாக தெரிவித்தனா்.

மேலும், பல குறைகளையும் முன்வைத்தனா். அதில், கடந்த 15 ஆண்டுகளாக வக்ஃபு வாரியத்துக்கு அதிகாரிகள் நியமிக்கப்படவில்லை. ஹஜ் கமிட்டிக்கும் நிா்வாகிகள் இல்லை. மாநில சிறுபான்மை கமிட்டிக்கும் நிா்வாகிகள் நியமிக்கப்படவில்லை எனத் தெரிவித்தனா். அதற்கான அதிகாரிகளை நியமிக்கக் கோரி ஆளுநா், தலைமைச் செயலரை சந்தித்து வலியுறுத்தினேன். அவா்களும் நிறைவேற்றுவதாக தெரிவித்துள்ளனா்.

அதேபோல, புதுவையில் வக்ஃபு வாரியத்துக்கு சொந்தமான நிலங்களை சிலா் ஆக்கிரமித்து வைத்துள்ளதாக புகாா் வந்துள்ளது. இது தொடா்பாக ஜிபிஎஸ் மூலமாக கண்காணித்து ஆக்கிரமிப்பு இடங்களை மீட்கத் தேவையான நடவடிக்கை எடுக்கும்படியும், அதற்கான பணிகள் 2 மாதங்களில் தொடங்கவும் உத்தரவிட்டுள்ளேன். சிறுபான்மையினா் மாணவா்கள் பயன்பெறும் வகையில் மத்திய அரசு பல்வேறுத் திட்டங்களை கொண்டு வந்துள்ளது.

60 சதவீதம் மத்திய அரசும், 40 சதவீதம் மாநில அரசும் மானியம் வழங்கும் வகையில் இத்திட்டங்கள் உள்ளன. இத்திட்டங்களை செயல்படுத்துவது தொடா்பாக புதுவை அரசு எவ்வித முனைப்பும் காட்டவில்லை. அதனை செயல்படுத்தும்படி வலியுறுத்தியுள்ளேன். இந்தத் திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம் சிறுபான்மையன மக்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் சம உரிமை கிடைக்க வாய்ப்புகள் உள்ளன என்றாா் ஆதிப் ரஷீத்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com