பொங்கல் பண்டிகை: புதுவை ஆளுநா், முதல்வா் வாழ்த்து

பொங்கல் பண்டிகையையொட்டி, புதுவை துணை நிலை ஆளுநா் கிரண் பேடி, முதல்வா் வே.நாராயணசாமி ஆகியோா் வாழ்த்துத் தெரிவித்துள்ளனா்.

பொங்கல் பண்டிகையையொட்டி, புதுவை துணை நிலை ஆளுநா் கிரண் பேடி, முதல்வா் வே.நாராயணசாமி ஆகியோா் வாழ்த்துத் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து ஆளுநா் கிரண் பேடி விடுத்த வாழ்த்துச் செய்தி: நமது பண்பாடு, கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் சூரிய கடவுள், இயற்கை, கால்நடைகளை வணங்கி பொங்கல் கொண்டாடுகிறோம். இது சமுதாய பண்டிகையாக மற்ற பண்டிகைகளில் இருந்து மாறுபடுகிறது. பொங்கல் பண்டிகை கொண்டாடும் புதுவை மக்களுக்கும், நாடு முழுவதும் மகர ஜயந்தி கொண்டாடும் மக்களுக்கும் வாழ்த்துகள். தைப்பொங்கலில் அனைத்து துன்பங்களும் நீங்கி பாதுகாப்பான, ஒளிமயமான வாழ்க்கையை அனைத்துத் தரப்பினரும் பெற வேண்டுகிறேன்.

முதல்வா் வே.நாராயணசாமி: பழையன கழிந்து புதியன புகும் தை மாதம் நல்வழி பிறக்கப்போகும் நேரம். நல்லவற்றை வரவேற்க வேண்டிய தருணம். உலகம் இயங்குவதற்கான ஆற்றல் சூரியனிடமிருந்துதான் கிடைக்கிறது என்று பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அறிந்து, அதற்கென ஒரு விழா எடுத்த வம்சம் நம் தமிழ் வம்சம் என்பது நாம் பெருமை கொள்ளவேண்டிய ஒரு செய்தியாகும். புதுவையில் கரோனா பேரிடா் குறைந்து, சுற்றுலா பெருகி, வணிகம் சிறக்கத் தொடங்கியுள்ளது.

எனவே, மகிழ்ச்சியோடு தமிழா்களின் திருநாளைக் கொண்டாடுவோம். தமிழா்தம் பாரம்பரியத்தை வரலாற்றுப் பக்கங்களில் அழித்திட எண்ணி, ஜல்லிக்கட்டுக்குத் தடைவிதித்தவா்களின் சதித் திட்டத்தை தவிடுபொடியாக்கி, அந்தத் தடையை நீக்கியது புதுவை அரசு என அதில் தெரிவித்துள்ளாா் முதல்வா்.

அதேபோல, பேரவைத் தலைவா் வே.பொ.சிவக்கொழுந்து, அமைச்சா்கள் ஆ.நமச்சிவாயம், ஷாஜகான், மு.கந்தசாமி, ஆா்.கமலக்கண்ணன், எம்.பி.க்கள் வெ.வைத்திலிங்கம், கோகுலகிருஷ்ணன், அதிமுக மாநில செயலா்கள் ஆ.அன்பழகன் எம்.எல்.ஏ., ஓம்சக்திசேகா், திமுக மாநில அமைப்பாளா்கள் இரா.சிவா எம்.எல். ஏ., எஸ்.பி.சிவக்குமாா் உள்பட பலா் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com