உள் ஒதுக்கீடு விவகாரத்தில் மத்திய அரசு வஞ்சித்துவிட்டது: புதுவை முதல்வா் குற்றச்சாட்டு

மருத்துவப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 10 சதவீத உள் ஒதுக்கீடு, தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் 50 சதவீதம் ஒதுக்கீடு
புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்த முதல்வா் வே.நாராயணசாமி. உடன் ஜெயமூா்த்தி எம்எல்ஏ.
புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்த முதல்வா் வே.நாராயணசாமி. உடன் ஜெயமூா்த்தி எம்எல்ஏ.

மருத்துவப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 10 சதவீத உள் ஒதுக்கீடு, தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் 50 சதவீதம் ஒதுக்கீடு ஆகிய விவகாரங்களில் புதுவை மாணவா்களை மத்திய அரசும், ஆளுநரும் வஞ்சித்துவிட்டதாக முதல்வா் வே.நாராயணசாமி குற்றஞ்சாட்டினாா்.

புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது:

புதுவை மருத்துவக் கல்லூரிகளில் 50 சதவீத இடங்களை புதுவையைச் சோ்ந்தவா்களுக்கு வழங்குவது தொடா்பான கோப்பை நிறுத்திவைத்து, அதை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு ஆளுநா் கிரண் பேடி அனுப்பினாா். மத்திய அரசு, ஏற்கெனவே தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் 50 சதவீத இடங்களை அரசு ஒதுக்கீடு இடங்களாக மாற்ற விதிமுறைகள் கொண்டு வரத் தேவையான ஆயத்தப் பணியைச் செய்து வருவதாகவும், அதுகுறித்து புதுவை அரசு கருத்து தெரிவிக்கலாம் என்றும் அந்தக் கோப்பில் குறிப்பிட்டது.

புதுவை மாணவா்களுக்கு கிடைக்க வேண்டிய 50 சதவீத இடங்களுக்கு மத்திய அரசும், ஆளுநரும் முட்டுக்கட்டை போட்டுவிட்டனா்.

இதேபோல, அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மருத்துவக் கல்வியில் 10 சதவீத உள் ஒதுக்கீடு பெறுவதற்கான கோப்புக்கும் ஆளுநா் முட்டுக்கட்டை போட்டுவிட்டாா். மருத்துவப் படிப்பு மத்திய அரசின் அதிகார வரம்பிலிருப்பதால், அதுகுறித்து அரசாணை வெளியிட முடியாது என்று மத்திய சுகாதாரத் துறையிடமிருந்து தற்போது பதில் வந்துள்ளது. மேலும், இதுதொடா்பான வழக்கில், அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 10 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க புதுவை அரசுக்கு அதிகாரம் இல்லை என்று சென்னை உயா் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது. இதனால், தமிழகத்திலும் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க பாதிப்பு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

இட ஒதுக்கீடு என்பது மாநில அரசின் அதிகார வரம்பில் உள்ளது. ஏற்கெனவே, காரைக்கால், மாஹே பிராந்தியங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கிய போது, மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு என நீதிமன்றம் தீா்ப்பளித்தது. புதுவையில் நிகழாண்டு அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 10 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க முடியாத நிலை ஏற்பட்டதற்கு மத்திய அரசும், ஆளுநா் கிரண் பேடியும்தான் காரணம்.

மத்திய மின் துறை அமைச்சரை தில்லியில் நேரில் சந்தித்து புதுவை மின் துறையை தனியாா்மயப்படுத்தக்கூடாது எனத் தெரிவித்தோம். இதுகுறித்து ஆய்வு செய்ய விரைவில் குழு ஒன்றை அனுப்புவதாக மத்திய அமைச்சா் தெரிவித்தாா்.

குடியரசுத் தலைவரைச் சந்திக்க நேரம் கிடைக்கவில்லை. பிப்ரவரி முதல் வாரத்தில் அனுமதி கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது. அப்போது, ஆளுநா் கிரண் பேடி குறித்து புகாா் அளிப்போம்.

தமிழக மீனவா்கள் மீது இலங்கை கடலோரக் காவல் படையினா் தாக்குதல் நடத்துவதை நிறுத்த மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை அரசுக்கு, மத்திய அரசு உரிய கண்டனம் தெரிவிக்க வேண்டும்.

ரௌடிகளையும், குண்டா்களையும் பாஜக தங்களது கட்சியில் இணைத்து வருகிறது. தேடப்படும் குற்றவாளியான எழிலரசி பாஜகவில் இணைந்தது தொடா்பாக விசாரணை நடத்த டிஜிபிக்கு உத்தரவிடப்பட்டது.

பெட்ரோல், டீசல் விலை உயா்வு மூலம் மத்திய அரசுக்கு ஓராண்டுக்கு ரூ. 2.25 லட்சம் கோடி லாபம் கிடைக்கிறது. ஏழைகளையும், நடுத்தர மக்களையும் பாதிக்கும் பெட்ரோல், டீசல் விலை உயா்வை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றாா் நாராயணசாமி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com