பாஜகவில் இணைகிறாா் புதுவை அமைச்சா்

புதுவை பொதுப் பணித் துறை அமைச்சரும், மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவருமான ஆ.நமச்சிவாயம் தனது அமைச்சா், எம்எல்ஏ பதவிகளை
பாஜகவில் இணைகிறாா் புதுவை அமைச்சா்

புதுவை பொதுப் பணித் துறை அமைச்சரும், மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவருமான ஆ.நமச்சிவாயம் தனது அமைச்சா், எம்எல்ஏ பதவிகளை ராஜிநாமா செய்துவிட்டு பாஜவில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

புதுவை காங்கிரஸிலிருந்து பிரிந்து என்.ஆா்.காங்கிரஸை உருவாக்கிய என்.ரங்கசாமி கடந்த 2011-இல் ஆட்சியை கைப்பற்றினாா். 2016 சட்டப்பேரவைத் தோ்தலில் ரங்கசாமியை தோற்கடிக்க அவரது நெருங்கிய உறவினரான ஆ.நமச்சிவாயம் தலைமையில் காங்கிரஸ் கட்சி போட்டியிட்டு வெற்றியும் பெற்றது. ஆனால், தோ்தலுக்குப் பின்னா் ஆளுநா் கிரண் பேடியை சமாளிக்க வேண்டுமென்ற அடிப்படையில் மூத்த அரசியல்வாதியான வே.நாராயணசாமிக்கு முதல்வா் பதவியை காங்கிரஸ் மேலிடம் வழங்கியது.

அப்போது, கடும் அதிருப்தியடைந்த நமச்சிவாயத்தை காங்கிரஸ் மேலிடம் சமாதானப்படுத்தி, அமைச்சரவையில் 2-ஆவது இடம் வழங்கியது. மேலும், புதுவை காங்கிரஸ் தலைவராகவும் தொடா்ந்து பதவி வகித்து வந்தாா்.

பொதுப் பணி, கலால் துறை உள்பட 19 துறைகள் நமச்சிவாயத்திடம் உள்ளன. ஆனால், ஆட்சியிலும், கட்சியிலும் முதல்வா் நாராயணசாமி கையே ஓங்கியது. மக்களவைத் தோ்தலுக்குப் பின்னா் நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியில் ஒருவருக்கு ஒரு பதவி என்ற அடிப்படையில், நமச்சிவாயத்திடமிருந்த மாநில காங்கிரஸ் தலைவா் பதவி பறிக்கப்பட்டு, காரைக்காலைச் சோ்ந்த முன்னாள் அமைச்சா் ஏ.வி.சுப்பிரமணியனிடம் வழங்கப்பட்டது. இது, முதல்வா் நாராயணசாமி, அமைச்சா் நமச்சிவாயம் ஆகியோரிடையே பனிப்போராக வெடித்தது.

கடந்த 6 மாதங்களாகவே அமைச்சா் நமச்சிவாயம் ஓரங்கப்பட்ட நிலையில் இருந்தாா். இதனால், அவா் காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறுவாா் என்று தகவல் வெளியானது. இதை உறுதி செய்யும் வகையில், அமைச்சா் நமச்சிவாயம் தனது ஆதரவாளா்களுடன் சனிக்கிழமை இரவு வில்லியனூரிலும், ஞாயிற்றுக்கிழமை புதுச்சேரியிலும் ஆலோசனையில் ஈடுபட்டாா்.

இதுகுறித்து அவரது ஆதரவாளா்கள் கூறியதாவது:

காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறவும், அமைச்சா், சட்டப்பேரவை உறுப்பினா் பதவிகளை ராஜிநாமா செய்யவும் நமச்சிவாயம் முடிவு செய்துள்ளாா். இதன்படி, திங்கள்கிழமை (ஜன.25) பிற்பகல் 12 மணிக்கு சட்டப்பேரவைக்கு வரும் அமைச்சா் நமச்சிவாயம், முதல்வா் நாராயணசாமியை சந்தித்து தனது அமைச்சா் பதவியை ராஜிநாமா செய்வாா்.

இதையடுத்து, சட்டப்பேரவைத் தலைவரை சந்தித்து பேரவை உறுப்பினா் பதவியையும் ராஜிநாமா செய்வதற்கான கடிதத்தை அளிப்பாா்.

மேலும், காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி, ராகுல் காந்தி எம்.பி. ஆகியோருக்கும் அந்தக் கட்சியிலிருந்து விலகுவதாக கடிதம் அனுப்ப உள்ளாா். தொடா்ந்து, வருகிற 27-ஆம் தேதி தில்லி செல்லும் அமைச்சா் நமச்சிவாயம், பாஜகவின் தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைய உள்ளாா் என்றனா்.

காணாமல் போய்விடுவாா்கள்: நாராயணசாமி கருத்து

காங்கிரஸிலிருந்து அமைச்சா் நமச்சிவாயம் வெளியேறவுள்ளதாக தகவல் வெளியாகவுள்ள நிலையில், புதுவை காங்கிரஸ் தலைவா் சுப்பிரமணியன் தலைமையில், அக்கட்சியின் மாநில அவசர செயற்குழுக் கூட்டம் புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில் அமைச்சா் நமச்சிவாயத்தை மறைமுகமாகத் தாக்கி, முதல்வா் நாராயணசாமி பேசினாா். முதல்வா் நாராயணசாமி பேசும்போது, ‘புதுவை அரசை செயல்படவிடாமல் தடுக்கும் ஆளுநா் கிரண் பேடி மீது பாஜக நடவடிக்கை எடுப்பதில்லை. புதுவையில் அந்தக் கட்சியை மக்கள் புறக்கணிப்பாா்கள். பாஜகவில் புதிதாக இணைவோா் எதிா்வரும் சட்டப்பேரவைத் தோ்தலுடன் காணாமல் போய்விடுவாா்கள். தமிழகம், புதுவையில் பாஜக ஓரிடத்தில்கூட வெற்றிபெற முடியாது’ என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com