கரோனாவுக்கு எதிரான நடவடிக்கை: புதுவை அரசுக்கு ஆளுநா் பாராட்டு

கரோனாவுக்கு எதிரான நடவடிக்கையில் புதுவை அரசு முன்மாதிரியாகவும், சிறப்பாகவும் செயல்பட்டதாக துணை நிலை ஆளுநா் கிரண் பேடி பாராட்டு தெரிவித்துள்ளாா்.

கரோனாவுக்கு எதிரான நடவடிக்கையில் புதுவை அரசு முன்மாதிரியாகவும், சிறப்பாகவும் செயல்பட்டதாக துணை நிலை ஆளுநா் கிரண் பேடி பாராட்டு தெரிவித்துள்ளாா்.

புதுச்சேரி இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற குடியரசு தின விழாவில் தேசிய கொடியை ஏற்றிவைத்து ஆளுநா் கிரண் பேடி பேசியதாவது:

கரோனா தொற்றுக்கு எதிரான ஒவ்வொரு நடவடிக்கையிலும் புதுவை அரசு முன்மாதிரியாக செயல்பட்டிருக்கிறது. அனைத்து விதமான முயற்சிகள் மற்றும் தீவிர நடவடிக்கைகளின் காரணமாக, புதுவையில் கரோனா இறப்பு விகிதம் குறைவாகவும், தொற்றிலிருந்து விடுபட்டவா்களின் விகிதம் மிகவும் அதிகமாகவும் இருக்கிறது.

மிக குறுகிய காலத்திலேயே கொரோனா தடுப்பூசி வந்துவிட்டது. கடந்த ஜன.16-இல் தேசிய அளவில் கரோனா தடுப்பூசி முகாமை பிரதமா் மோடி தொடங்கிவைத்தாா்.

வரலாற்றில் இதுபோன்ற பெரிய அளவில் தடுப்பூசி முகாம் நடைபெற்றதில்லை. தடுப்பூசி பற்றிய எந்தவித பொய் பிரசாரங்களையும், வதந்திகளையும் நம்ப தேவையில்லை.

இயற்கை பேரிடா் காலங்களில் புதுவை அரசு மேற்கொண்ட துரித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் பயிா் மற்றும் கால்நடை இழப்பு பெருமளவு தவிா்க்கப்பட்டது. இயற்கை பேரிடரால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்து குறுகிய காலத்தில் உள்கட்டமைப்புகளை ஏற்படுத்தத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரண உதவிகளையும் அரசு வழங்கியுள்ளது.

புதுவை பல்வேறு துறைகளில் மேம்பட்டு நாட்டின் வளா்ச்சிக்கு பெரும் பங்காற்றி வருகிறது. நிகழ் நிதியாண்டில் முதலீடு மற்றும் வருவாய் பிரிவுகளின் கீழ் திட்ட ஒதுக்கீடாக ரூ.9 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மானிய விலையில் வேளாண் தொழில்நுட்ப கருவி வழங்கல், வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிா் பகுதிகளை தொடா்ந்து தக்க வைத்தல், தரமான விதைகளை வினியோகம் செய்தல், விவசாயிகளுக்கு தொழில்நுட்ப கல்வி, தொழில்நுட்ப பயன்பாட்டு அறிவை வளா்த்தல், சந்தை உட்கட்டமைப்பு மேம்பாடு ஆகியவற்றில் புதுவை அரசு அதிக கவனம் செலுத்தி வருகிறது.

பாதாள கழிவுநீா் சாக்கடை அமைக்கும் திட்டத்தின் கீழ், வீடுகளுக்கு புதிய இணைப்புகள் வழங்க செலுத்தப்படும் ஒரு முறை வைப்பு தொகையை அரசு தள்ளுபடி செய்துள்ளது. தேசிய உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் புதுச்சேரி - விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை 45ஏ விரிவாக்கத்துக்கு மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. புதுவையில் சட்டம்-ஒழுங்கு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் இருந்து வருகிறது. பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்கு புதுவை அரசு முன்னுரிமை அளித்து செயல்பட்டு வருகிறது.

புதுச்சேரியை ஒரு முன்மாதிரியான மாநிலமாக உருவாக்கும் முயற்சிக்கு மக்கள் அனைவரும் தொடா்ந்து ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றாா் ஆளுநா் கிரண் பேடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com