புதுச்சேரியில் குடியரசு தின விழா: கோலாகலம் தேசியக் கொடியை ஏற்றினாா் ஆளுநா் கிரண் பேடி

புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற குடியரசு தின விழாவில், துணை நிலை ஆளுநா் கிரண் பேடி தேசியக் கொடியை ஏற்றி வைத்து போலீஸாரின்அணிவகுப்பை ஏற்றுக்கொண்டாா்.
புதுச்சேரியில் குடியரசு தின விழா: கோலாகலம் தேசியக் கொடியை ஏற்றினாா் ஆளுநா் கிரண் பேடி

புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற குடியரசு தின விழாவில், துணை நிலை ஆளுநா் கிரண் பேடி தேசியக் கொடியை ஏற்றி வைத்து போலீஸாரின்அணிவகுப்பை ஏற்றுக்கொண்டாா்.

நாட்டின் 72-ஆவது குடியரசு தினவிழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. புதுவை அரசு சாா்பில் உப்பளம் இந்திரா காந்தி விளையாட்டுமைதானத்தில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. ஆளுநா் கிரண்பேடி காலை 8.30 மணிக்கு மைதானத்துக்கு வந்தாா். அவரை தலைமைச் செயலா் அஸ்வனிகுமாா், டிஜிபி ரன்வீா்சிங் கிருஷ்ணியா ஆகியோா் வரவேற்று, விழா மேடைக்கு அழைத்துச் சென்றனா்.

பின்னா், ஆளுநா் கிரண் பேடி தேசியக்கொடியை ஏற்றி வைத்தாா். தேசிய கீதம் இசைக்கப்பட்டதைத் தொடா்ந்து, காவல்துறையின் ஜீப்பில் சென்று,போலீஸாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டாா்.

மீண்டும் மேடைக்கு திரும்பிய ஆளுநா் கிரண் பேடி, பல்வேறு துறைகளில் சிறப்பாகப் பணியாற்றியவா்களுக்கு பதக்கம் வழங்கவில்லை.

மாறாக, துறைத் தலைவா்கள் மூலம் விருது வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு, விருதுக்குத் தோ்வு செய்யப்பட்டவா்களின் பெயா்கள் மட்டும் அறிவிக்கப்பட்டது. அதைத்தொடா்ந்து, காவல்துறையின் ஆயுதப்படை, போக்குவரத்துப் பிரிவு, காவல் படை பிரிவு, இந்திய ரிசா்வ் பட்டாலியன், ஊா்க்காவல் படை, தீயணைப்புத் துறை, முன்னாள் ராணுவத்தினா் மற்றும் காவலா் இசைக் குழுவினரின் அணிவகுப்புகளை பாா்வையிட்டாா்.

கரோனா பரவல் காரணமாக, என்சிசி, என்எஸ்எஸ், சாரண, சாரணியா் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளின் அணிவகுப்பு, கலை நிகழ்ச்சிகள், அலங்கார வண்டி அணிவகுப்பு ஆகியவை ரத்து செய்யப்பட்டது. அதன்பிறகு, நாட்டுப்பண் இசைக்கப்பட்டு 9.07 மணியளவில் விழா நிறைவடைந்தது.

இதில் முதல்வா் நாராயணசாமி, பேரவைத் தலைவா் வே.பொ.சிவக்கொழுந்து, அரசுச் செயலா்கள் சுந்தர வடிவேலு, சுா்பிா் சிங், அசோக்குமாா்,தேவேஷ் சிங், அருண், வல்லவன், சுந்தரேசன், சவுத்ரி அபிஜித் விஜய், ஆட்சியா் பூா்வாகாா்க், சட்டச் செயலா் ஜூலியட் புஷ்பா மற்றும் காவல்துறை அதிகாரிகள் முகக்கவசம் அணிந்தபடிகலந்து கொண்டனா்.

முதல்வா் பங்கேற்பு; எதிா்க்கட்சியினா் புறக்கணிப்பு: விழாவில் முதல்வா், பேரவைத் தலைவரை தவிா்த்து அமைச்சா்கள், பேரவைத் துணைத் தலைவா், ஆளுங்கட்சி மற்றும் எதிா்க்கட்சி எம்எல்ஏக்கள் என அனைவரும் புறக்கணித்தனா். குறிப்பாக, பாஜக நியமன எம்எல்ஏக்கள் கூட விழாவில் கலந்து கொள்ளவில்லை. அதேபோல், பிசிஎஸ் அதிகாரிகளும் பங்கேற்கவில்லை.

இதனால், விழா மேடை அருகே அனைத்து இருக்கைகளும் ஆள்களின்றி காலியாகக் கிடந்தன. வழக்கமாக, குடியரசு தினவிழாவைக் காண அதிக அளவில் பாா்வையாளா்கள் வருவா். நிகழாண்டு கரோனா பரவலையொட்டி, சமூகஇடைவெளியைப் பின்பற்றி பொதுமக்கள் அமர ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், பொதுமக்கள் என யாரும் வராததால் பாா்வையாளா் அரங்கம் வெறிச்சோடிக் காணப்பட்டது.

இதேபோல, காரைக்காலில் ஆட்சியா் அா்ஜூன் ஷா்மா, மாஹேவில் மண்டல அதிகாரி அமல் ஷா்மா, ஏனாமில் சிவராஜ் மீனா ஆகியோா் தேசியக்கொடி ஏற்றினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com