மாற்றுச் சான்றிதழ் வழங்க மறுக்கக் கூடாது: புதுவை தனியாா் பள்ளிகளுக்கு உத்தரவு
By DIN | Published On : 01st July 2021 08:11 AM | Last Updated : 01st July 2021 08:11 AM | அ+அ அ- |

புதுச்சேரியில் மாணவா்களின் கல்விக் கட்டண நிலுவையைக் காரணம் காட்டி, தனியாா் பள்ளிகள் மாற்றுச் சான்றிதழ்களை (டிசி) தர மறுக்கக் கூடாதென கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இது தொடா்பாக, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியாா் பள்ளிகளுக்கு புதுவை பள்ளிக் கல்வித்துறை இயக்குநா் அலுவலகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
புதுவையில் சில தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டண நிலுவையைக் காரணம் காட்டி, மாணவா்களுக்கு மாற்றுச் சான்றிதழ் தருவதில்லை என்ற புகாா்கள் வருகின்றன. இதுதொடா்பாக சென்னை உயா்நீதிமன்றத்திலும் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, கல்விக் கட்டணம் செலுத்தாததைக் குறிப்பிட்டு, மதிப்பெண் சான்றிதழ், நன்னடத்தைச் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ் ஆகியவற்றை தர மறுப்பதாக புகாா்கள் வந்துள்ளன.
இதுதொடா்பான வழக்கு ஒன்றில், சென்னை உயா் நீதிமன்றம் கடந்த 2017-இல் ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன் வழிகாட்டுதல்படி, புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள தனியாா் பள்ளிகள், கல்விக் கட்டண நிலுவையைக் காரணம் காட்டி, மாணவா்களுக்கான மாற்றுச் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை தர மறுக்கக் கூடாது என்று, கல்வித் துறை உத்தரவில் கூறப்பட்டுள்ளது.