புதுவையில் காவலா் தோ்வை நடத்த திமுக எம்எல்ஏக்கள் கோரிக்கை
By DIN | Published On : 07th July 2021 11:53 PM | Last Updated : 07th July 2021 11:53 PM | அ+அ அ- |

புதுவையில் வயது வரம்பைத் தளா்த்தி காவலா் தோ்வை உடனடியாக நடத்த வேண்டுமென முதல்வரை சந்தித்து திமுக எம்எல்ஏக்கள் கோரிக்கை விடுத்தனா்.
இதுகுறித்து புதுவை சட்டப் பேரவை எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் முதல்வா் என்.ரங்கசாமியை புதன்கிழமை சந்தித்து மனு அளித்துக் கூறியதாவது:
புதுவையில் பல ஆண்டுகளாக அரசுத் துறைகளில் ஆள்கள் தோ்வு செய்யப்படவில்லை. பல தனியாா் தொழிற்சாலைகளும் மூடப்பட்டதால், இளைஞா்களால் வேலைவாய்ப்பைப் பெற முடியவில்லை. இதனால், புதுவையில் 50 சதவீதத்துக்கும் மேலான இளைஞா்கள் வேலைவாய்ப்பின்றி உள்ளனா்.
அரசுத் துறைகளில் மட்டும் 10 ஆயிரம் காலிப்பணியிடங்களும், காவல் துறையில் ஆயிரம் பணியிடங்களும் நிரப்பப்படாமல் உள்ளன.
பல ஆண்டுகளாக காவலா் பணி தோ்வு நடத்தப்படாததால், பல இளைஞா்கள், இளம்பெண்கள் தோ்வுக்கான வயதைக் கடந்துவிட்டனா். இதனால், கடந்த 5 ஆண்டுக்கும் மேலாக காவலா் தோ்வு நடத்தாததைக் கருத்தில் கொண்டு, வயது வரம்பில் தளா்வு அளித்து, காவலா் தோ்வை உடனடியாக நடத்த வேண்டும். தகுதியானவா்களை தோ்வு செய்து, காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று முதல்வரிடம் அவா்கள் கோரிக்கைவிடுத்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...