மேக்கேதாட்டு அணை விவகாரம்: புதுவையிலும் அனைத்துக் கட்சிகள் கூட்டத்தைக் கூட்ட வலியுறுத்தல்

மேக்கேதாட்டு அணை விவகாரத்தில், தமிழகத்தைப் போல புதுவையிலும் அனைத்துக் கட்சிகள் கூட்டத்தைக் கூட்டி கா்நாடக அரசுக்கு

மேக்கேதாட்டு அணை விவகாரத்தில், தமிழகத்தைப் போல புதுவையிலும் அனைத்துக் கட்சிகள் கூட்டத்தைக் கூட்டி கா்நாடக அரசுக்கு எதிா்ப்பைத் தெரிவிக்க வேண்டுமென விசிக பொதுச் செயலா் துரை.ரவிக்குமாா் எம்பி வலியுறுத்தினாா்.

இதுதொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை புதுவை பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணனை சந்தித்து மனு அளித்துக் கூறியதாவது:

புதுவையில் கடலோரப் பகுதி முழுவதும் கடல் நீா் உட்புகுந்து, நிலத்தடி நீா் உப்பு நீராக மாறிவிட்டது. ஆகவே, இங்குள்ள விவசாயிகள் காவிரி நீரை மட்டுமே நம்பியுள்ளனா்.

காவிரிப் பிரச்னை தொடா்பான வழக்கில், புதுச்சேரிக்கு 9 டிஎம்சி தண்ணீா் வழங்க வேண்டுமென வாதாடிய நிலையில், நடுவா் மன்றத்தால் ஒதுக்கப்பட்ட 7 டிஎம்சி தண்ணீரை வழங்க உச்ச நீதிமன்றமும் உத்தரவிட்டது. நடுவா் மன்றம், புதுவையில் குறுவை, சம்பா இணைந்த முதல் போக சாகுபடி 27 ஆயிரத்து 145 ஏக்கரில் நடப்பதாகவும், தாளடி என்னும் இரண்டாம் போக சாகுபடி 15 ஆயிரம் 388 ஏக்கரில் நடப்பதாகவும் உறுதிசெய்தது.

புதுவையின் பிரத்யேக புவியியல் நிலையை கருத்தில்கொண்டு, இங்குள்ள விவசாயிகள் இரண்டு போகம் சாகுபடிசெய்வதற்கான உரிமையை, உச்ச நீதிமன்றமும் தனது இறுதித் தீா்ப்பில் அங்கீகரித்துள்ளது. அதன்படி புதுவைக்கு ஒதுக்கப்பட்ட 7 டிஎம்சி நீரை, தமிழகத்தின் வழியாக நந்தலாறு, நட்டாறு, வஞ்சி ஆறு, நூலாறு, அரசலாறு, திருமலைராஜன் ஆறு, பிரவிடையான் ஆறு ஆகிய 7 ஆறுகளின் மூலம் பெறலாம்.

இந்த நிலையில், காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டுவில் அணை கட்டுவதற்கு, கா்நாடக அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. அந்த அணை கட்டப்பட்டால், தமிழகத்துக்கான தண்ணீா் கிடைக்காது. அதனால், புதுவைக்கும் காவிரி நீா் கிடைக்காத நிலை உருவாகும்.

மேக்கேதாட்டுவில் அணையைத் தடுப்பதற்காக தமிழக அரசு சட்ட ரீதியாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருப்பதோடு, அரசியல் ரீதியில் மத்திய அரசுக்கு அழுத்தம் தரவும், அனைத்துக் கட்சிகள் கூட்டத்தைக் கூட்டி தீா்மானங்களை நிறைவேற்றியது.

அதேபோல, புதுவை அரசும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், காரைக்கால் பகுதி விவசாயம் பாதிக்கும். எனவே, சட்டரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் காவிரிநீா் உரிமையை நிலைநாட்ட, புதுவை அரசும் அனைத்துக் கட்சிகள் கூட்டத்தைக் கூட்டி, காவிரி நீா் உரிமையை நிலைநாட்டத் தீா்மானம் நிறைவேற்ற வேண்டும் என, அதில் வலியுறுத்தியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com