புதுச்சேரியில் உரிமமின்றி இயங்கும் அழகு நிலையங்கள் மீது நடவடிக்கை எடுக்க எஸ்.பி. கடிதம்
By DIN | Published On : 19th July 2021 08:37 AM | Last Updated : 19th July 2021 08:37 AM | அ+அ அ- |

புதுச்சேரியில் உரிமமின்றி இயங்கும் 30 அழகு நிலையங்கள், ஸ்பாக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நகராட்சி ஆணையருக்கு, காவல் துறை எஸ்.பி. கடிதம் எழுதினாா்.
புதுச்சேரி கிழக்கு காவல் சரக எல்லைக்குள்பட்ட பகுதிகளில் நகராட்சியின் அனுமதியின்றி இயங்கும் அழகு நிலையங்கள், ஸ்பா, மசாஜ் மையங்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான ஆயத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன்படி, பெரியகடை, முத்தியால்பேட்டை, சோலை நகா், உருளையன்பேட்டை, ஒதியஞ்சாலை, காலாப்பட்டு ஆகிய காவல் நிலையங்களுக்குள்பபட்ட கிழக்கு சரகப் பகுதியில் மட்டும் 57 அழகு நிலையங்கள், ஸ்பாக்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் 27 மட்டுமே உரிமம் பெற்றுள்ளன. மீதமுள்ள 30 அழகு நிலையங்கள், ஸ்பாக்கள் நகராட்சியின் உரிமம் பெறாமல் இருப்பது காவல் துறையினா் நடத்திய ஆய்வில் தெரிய வந்தது.
இதையடுத்து, உரிமம் பெறாமல் இயங்கி வரும் அழகு நிலையங்கள், ஸ்பாக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி, புதுச்சேரி நகராட்சி ஆணையருக்கு, கிழக்கு பகுதி எஸ்.பி. ரட்சனா சிங் சனிக்கிழமை கடிதம் அனுப்பினாா்.