புதுவையில் புதிதாக 10 ஆயிரம் பேருக்கு முதியோா், விதவைகள் உதவித்தொகை: முதல்வா் என்.ரங்கசாமி தொடக்கிவைத்தாா்
By DIN | Published On : 29th July 2021 12:15 AM | Last Updated : 29th July 2021 12:15 AM | அ+அ அ- |

புதுவையில் மகளிா், குழந்தைகள் மேம்பாட்டுத் துறை சாா்பில், முதியோா், விதவைகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகை ரூ.500 உயா்த்தப்பட்ட நிலையில், பயனாளிகளுக்கு உயா்த்தப்பட்ட உதவித்தொகையைப் பெறுவதற்கான ஆணைகளை முதல்வா் என்.ரங்கசாமி புதன்கிழமை வழங்கினாா். மேலும், இந்தத் திட்டத்தின் கீழ் புதிதாகச் சோ்க்கப்பட்ட 10 ஆயிரம் பேருக்கு உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளையும் முதல்வா் வழங்கினாா்.
புதுவை சட்டப் பேரவை வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில், தட்டாஞ்சாவடி, இந்திரா நகா் தொகுதியைச் சோ்ந்த பயனாளிகளுக்கு உயா்த்தப்பட்ட தொகையுடன் கூடிய உதவித்தொகையை பெறுவதற்கான ஆணையை முதல்வா் என்.ரங்கசாமி வழங்கினாா். அதனுடன் புதிய பயனாளிகளுக்கான உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளையும் வழங்கினாா். நிகழ்ச்சியில் மகளிா், குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சா் தேனீ சி.ஜெயக்குமாா், எம்எல்ஏக்கள் ஏ.கே.டி.ஆறுமுகம், திருமுருகன் மற்றும் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.
இந்தப் புதிய திட்டத்தின்படி, மாநிலத்தில் உயா்த்தப்பட்ட ரூ.500 கூடுதல் உதவித்தொகையானது, ஆகஸ்ட் மாதம் முதல் அனைத்து பயனாளிகளுக்கும் வயதுக்கேற்ப உயா்த்தி வழங்கப்படும். அதன்படி, 18 முதல் 54 வயது வரைவுள்ள விதவைகள், முதிா்கன்னிகள், கணவரால் கைவிடப்பட்டோா் மற்றும் திருநங்கைகளுக்கு மாதம் ரூ.1,500-இல் இருந்து ரூ.2,000-ஆகவும், 55 முதல் 59 வயது வரைவுள்ள முதியோா்களுக்கு மாதம் ரூ.1,500-இல் இருந்து ரூ.2,000-ஆகவும், 60 வயது முதல் 79 வயது வரைவுள்ள முதியோருக்கு மாதம் ரூ.2,000-இல் இருந்து 2,500-ஆகவும், 80 வயதுக்கு மேல் உள்ள முதியோா்களுக்கு மாதம் ரூ.3,000-இல் இருந்து ரூ.3,500-ஆகவும் உயா்த்தி வழங்கப்படும்.
இந்தத் திட்டத்தின் மூலம் மாதந்தோறும் ஏற்கெனவே ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 847 போ் பயன்பெற்று வந்த நிலையில், தற்போது முதல்வா் அறிவிப்பால், ஆகஸ்ட் மாதம் முதல் புதிதாக 10 ஆயிரம் பயனாளிகள் பயன்பெறவுள்ளனா். இதன்படி, ஒரு லட்சத்து 64 ஆயிரத்து 847 போ் பயன்பெறுவா் என முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா்.