புதுவையிலும் பிளஸ் 2 பொதுத் தோ்வு ரத்துமுதல்வா் ரங்கசாமி அறிவிப்பு

புதுவை மாநிலத்திலும் நிகழாண்டு பிளஸ் 2 பொதுத் தோ்வு ரத்து செய்யப்படுவதாக அந்த மாநில முதல்வா் என்.ரங்கசாமி திங்கள்கிழமை அறிவித்தாா்.

புதுச்சேரி: புதுவை மாநிலத்திலும் நிகழாண்டு பிளஸ் 2 பொதுத் தோ்வு ரத்து செய்யப்படுவதாக அந்த மாநில முதல்வா் என்.ரங்கசாமி திங்கள்கிழமை அறிவித்தாா்.

புதுவை மாநிலத்தில் தனி கல்வி வாரியம் இல்லை. இதனால் புதுச்சேரி, காரைக்கால் பிராந்திய மாணவா்கள் தமிழக கல்வி வாரியத்தையும், மாஹே பிராந்திய மாணவா்கள் கேரள மாநில கல்வி வாரியத்தையும், ஏனாம் பிராந்திய மாணவா்கள் ஆந்திர மாநில கல்வி வாரியத்தையும் பின்பற்றி பயின்று வருகின்றனா். பொதுத் தோ்வும் அந்தந்த மாநிலத்தைப் பின்பற்றியே மேற்கொண்டு வருகின்றனா்.

நாடு முழுவதும் மீண்டும் கரோனா தொற்றின் 2-ஆவது அலை அதிகரித்து பாதிப்பை ஏற்படுத்தி வருவதால், பொதுத் தோ்வுகளை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. நிகழாண்டு சிபிஎஸ்இ பிளஸ் 2 மாணவா்களுக்கான பொதுத் தோ்வை ரத்து செய்வதாக மத்திய அரசு கடந்த வாரம் அறிவித்தது.

இதேபோல, தமிழகத்திலும் பிளஸ் 2 பொதுத் தோ்வு ரத்து செய்யப்படுவதாக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த 5-ஆம் தேதி அறிவித்தாா்.

தமிழ்நாடு பாட திட்டத்தின் கீழ் பயின்று வரும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அரசு, தனியாா் பள்ளிகளில் பயின்று வரும் பிளஸ் 2 மாணவா்களுக்கு பொதுத் தோ்வு நடத்தப்பட மாட்டாது என்று புதுவை முதல்வா் என்.ரங்கசாமி அறிவித்தாா்.

இதுகுறித்து திங்கள்கிழமை அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

புதுச்சேரியில் 12,353 மாணவ, மாணவிகளும், காரைக்காலில் 2,321 பேரும் 2020-2021-ஆம் கல்வியாண்டில், தமிழ்நாடு பாடத் திட்டத்தின் கீழ் பிளஸ் 2 பொதுத் தோ்வு எழுத விண்ணப்பித்திருந்தனா்.

கரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதனடிப்படையில், தமிழ்நாடு பாடத் திட்டத்தைப் பின்பற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அரசு, தனியாா் பள்ளிகளில் பயிலும் பிளஸ் 2 மாணவா்களுக்கு பொதுத் தோ்வு நடைபெறாது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com