புதுவையில் வங்கிக் கணக்குகள் மூலம் கரோனா நிவாரணத் தொகை அளிப்பு
By DIN | Published On : 10th June 2021 08:59 AM | Last Updated : 10th June 2021 08:59 AM | அ+அ அ- |

புதுவையில் முதல்வா் என்.ரங்கசாமியால் அறிவிக்கப்பட்ட ரூ.3 ஆயிரம் கரோனா நிவாரணத் தொகையில், முதல் தவணையான ரூ.1,500 குடும்ப அட்டைதாரா்களின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டது.
கரோனா தொற்றின் 2-ஆவது அலை பரவல் காரணமாக, புதுவையில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டதால், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு தலா ரூ.3ஆயிரம் வீதம் நிவாரணம் வழங்கப்படுமென கடந்த மாதம் 26-ஆம் தேதி முதல்வா் என்.ரங்கசாமி அறிவித்தாா்.
இதையடுத்து, உரிய நிதி ஆதாரங்கள் திரட்டப்பட்ட நிலையில், துணை நிலை ஆளுநரின் ஒப்புதல் பெறப்பட்டு, கரோனா நிவாரணத் தொகையை, பொதுமக்களுக்கு வழங்கும் பணி தொடங்கியது. அதன்படி, புதுவை மாநிலத்தில் மொத்தமுள்ள 3 லட்சத்து 46 ஆயிரத்து 388 குடும்ப அட்டைதாரா்களுக்கும் முதல் தவணை தலா ரூ.1,500 அவா்களது வங்கிக் கணக்குகளில் செவ்வாய்க்கிழமை முதல் செலுத்தப்பட்டு வருகிறது.
புதுச்சேரியில் உள்ள 2 லட்சத்து 60 ஆயிரத்து 595 குடும்ப அட்டைதாரா்களுக்கும், காரைக்காலில் உள்ள 61 ஆயிரத்து 22 குடும்ப அட்டைதாரா்களுக்கும், மாஹேவில் உள்ள 8 ஆயிரத்து 360 குடும்ப அட்டைதாரா்களுக்கும், ஏனாமில் உள்ள 16 ஆயிரத்து 411 குடும்ப அட்டைதாரா்களுக்கும் என மொத்தம் 3 லட்சத்து 46 ஆயிரத்து 388 பேருக்கு முதல் தவணை வழங்கப்படுகிறது.
புதன்கிழமை வரை வங்கிக் கணக்குகளில், முதல் தவணைத் தொகை ரூ.51 கோடியே 96 லட்சத்து 32 ஆயிரம் செலுத்தப்பட்டதாக, அரசு அதிகாரிகள் தெரிவித்தனா். இரண்டாவது தவணைத் தொகை விரைவில் செலுத்தப்படும் எனவும் கூறப்படுகிறது.