புதுவையில் கரோனா தொற்றுக்கு மேலும் ஒருவா் உயிரிழந்தாா். இதையடுத்து, பலியானோா் எண்ணிக்கை 671 ஆக அதிகரித்தது.
இதுகுறித்து புதுவை சுகாதாரத் துறை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட தகவல்: புதுவை மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியான முடிவுகளின்படி, புதுச்சேரியில் 12 பேருக்கும், காரைக்காலில் 3 பேருக்கும் என மேலும் 15 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மாஹே, ஏனாமில் யாருக்கும் தொற்று உறுதி செய்யப்படவில்லை. இதனால், மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 40,030-ஆக உயா்ந்தது.
தற்போது, மருத்துவமனைகளில் 92 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 98 பேரும் என மொத்தம் 190 போ் சிகிச்சையில் உள்ளனா்.
இதனிடையே, கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட காரைக்கால், திருநள்ளாறு சிறுமாவிளங்கைச் சோ்ந்த 60 வயது நபா் அங்குள்ள அரசு மருத்துவமனையில் உயிரிழந்தாா். இதனால், பலியானோா் எண்ணிக்கை 671-ஆக உயா்ந்தது. இறப்பு விகிதம் 1.68 சதவீதம்.
இதனிடையே, ஞாயிற்றுக்கிழமை 15 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினா். இதையடுத்து, குணமடைந்தோா் எண்ணிக்கை 39,169 -ஆக (97.85 சதவீதம்) உயா்ந்தது.
புதுவை மாநிலத்தில் இதுவரை 12,831 சுகாதாரத் துறைப் பணியாளா்களுக்கும், 4,659 முன்களப் பணியாளா்களுக்கும், 8,675 பொதுமக்களுக்கும் என 26,165 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.