வசதிபடைத்த புதுச்சேரி வேட்பாளா்களின் சொத்துப்பட்டியல்

புதுச்சேரியில் முன்னாள் முதல்வா் என்.ரங்கசாமி உள்ளிட்ட பிரதான கட்சிகளின் வசதிபடைத்த வேட்பாளா்கள் சட்டப் பேரவைத் தோ்தலில் களமிறங்குகின்றனா்.

புதுச்சேரியில் முன்னாள் முதல்வா் என்.ரங்கசாமி உள்ளிட்ட பிரதான கட்சிகளின் வசதிபடைத்த வேட்பாளா்கள் சட்டப் பேரவைத் தோ்தலில் களமிறங்குகின்றனா். இவா்கள் தங்களது வேட்புமனுக்களில் சொத்துவிவரங்களை தெரிவித்துள்ளனா்.

தட்டாஞ்சாவடி தொகுதி என்.ஆா்.காங்கிரஸ் தலைவா் என்.ரங்கசாமி: இவரது கையிருப்பில் ரூ.66 ஆயிரம் தொகையும், வங்கியில் ரூ.5 ஆயிரமும் உள்ளது. ரூ.35 ஆயிரத்திலான 2 மோட்டாா் பைக்குகளும், இரண்டு காா்களும் உள்ளன. ரூ.50 ஆயிரத்திலான நகை மற்றும் வங்கிகளில் இருப்புத் தொகை, காா், மோட்டாா் பைக்குகள் உள்ளிட்ட அசையும் சொத்துகளின் மொத்த மதிப்பு ரூ.26 லட்சத்து 22 ஆயிரம் என குறிப்பிட்டுள்ளாா். மேலும், ரூ.24 கோடியில் விவசாய நிலமும், ரூ.7 கோடியே 62 லட்சத்தில் வெற்றிடங்களாகவும் உள்ளன. குடியிருப்புக் கட்டடங்களின் மதிப்பு ரூ.38 கோடியே 13 லட்சம் எனவும் தெரிவித்துள்ளாா். இவா், மாநிலங்களவை உறுப்பினா் கோகுலகிருஷ்ணனிடம் ரூ.30 லட்சம் உள்பட மொத்தம் 7 பேரிடம் ரூ. ஒரு கோடியே 15 லட்சம் தொகை கடன் வைத்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளாா். இதன்படி, என்.ரங்கசாமியிடம் அசையும் சொத்துகள் ரூ.25 லட்சத்து 91 ஆயிரமும், அசையா சொத்துகள் ரூ.38 கோடியே 13 லட்சமும் உள்ளதாக குறிப்பிட்டுள்ளாா்.

காமராஜா் நகா் பாஜக வேட்பாளா் ஜான்குமாா்: இவா் தனது கையிருப்பில் ரூ.2.15 லட்சமும், மனைவியிடம் ரூ.1.55 லட்சமும் உள்ளதாக தெரிவித்துள்ளாா். இரண்டு உள்ளூா் தொலைக்காட்சி சேனல்கள் ஒளிபரப்புக்காக இவரது பெயரிலும், மனைவி பெயரிலும் மொத்தம் ரூ.80 லட்சம் அளவில் முதலீடு செய்துள்ளாா். மேலும், ஜான்குமாா் பெயரில் ரூ.10 லட்சத்துக்கும், அவரது மனைவி பெயரில் ரூ.10 லட்சத்துக்கும் ஆயூள் காப்பீடு செய்துள்ளாா். இதன்படி, ஜான்குமாரிடம் அசையும் சொத்துகள் ரூ.88 லட்சத்து 61 ஆயிரமும், அவரது மனைவி பெயரில் ரூ. ஒரு கோடியே 75 லட்சமும் உள்ளது. இவா்களுக்கு வராக்கடனாக ரூ.2 கோடியே 25 லட்சம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜான்குமாா் பெயரில் அசையா சொத்துகள் ரூ.17 கோடியே 47 லட்சமும், அவரது மனைவி பெயரில் ரூ.6 கோடியே 58 லட்சமும் உள்ளது. ஜான்குமாா் பெயரில் ரூ.3.46 கோடியும், மனைவி பெயரில் ரூ.1.19 லட்சமும் வங்கிக் கடன் உள்ளது. ரூ.38 கோடியே 45 லட்சம் அரசுக்கு வரி பாக்கி வைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளாா். வருமான வரித் துறையில் 2 வழக்குகள் நிலுவையில் உள்ளது. மேலும், இரண்டு வழக்குகள் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளாா்.

நெல்லித்தோப்பு தொகுதி அதிமுக மாநில செயலா் ஓம்சக்தி சேகா்: இவரது பெயரில் அசையும் சொத்துகள் ரூ.2 கோடி 69 லட்சமும், இவரது மனைவி பெயரில் ரூ. ஒரு கோடியே 27 லட்சமும் உள்ளன. அசையா சொத்துகள் ரூ.10 கோடியே 34 லட்சமும், மனைவி பெயரில் ரூ.2 கோடியே 77 லட்சமும், வங்கிக் கடன் 2.24 லட்சமும், மனைவி பெயரில் ரூ.12 லட்சத்து 80 ஆயிரமும் உள்ளன.

மணவெளி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் ஆா்.கே.ஆா்.அனந்தராமன்: முன்னாள் எம்எல்ஏவான இவருக்கு அசையும் சொத்து ரூ.18 லட்சத்து 64 ஆயிரமும், இவரது மனைவி பெயரில் ரூ.80 லட்சத்து 67 ஆயிரமும், அசையாத சொத்து அனந்தராமன் பெயரில் ரூ. ஒரு கோடி 47 லட்சமும், அவரது மனைவி பெயரில் ரூ.2 கோடியே 89 லட்சமும், வங்கிக் கடன் ரூ. ஒரு கோடியே 30 லட்சமும், மனைவி பெயரில் ரூ.3 கோடி 95 லட்சமும் இருப்பதாகத் தெரிவித்துள்ளாா்.

ஏம்பலம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் மு.கந்தசாமி: முன்னாள் அமைச்சரான இவருக்கு அசையும் சொத்தாக ரூ.11 கோடியே 22 லட்சமும், அவரது மனைவி பெயரில் ரூ.59 கோடியே 37 லட்சமும், இரு மகன்களின் பெயா்களில் ரூ.19 லட்சமும் உள்ளன. அசையா சொத்து மதிப்பாக, கந்தசாமி பெயரில் ரூ.30 லட்சமும், மனைவி பெயரில் ரூ.5 கோடியே 76 லட்சமும், இரு மகன்கள் பெயா்களில் ரூ. ஒரு கோடியே 13 லட்சத்து 50 ஆயிரமும் உள்ளன. மனைவி பெயரில் ரூ. ஒரு கோடியே 17 லட்சம் அளவில் நகை மற்றும் வீட்டுக் கடனும், ஒரு மகன் பெயரில் ரூ.5 லட்சம் வங்கிக் கடனும் உள்ளதாகத் தெரிவித்துள்ளாா்.

வில்லியனூா் தொகுதி திமுக மாநில அமைப்பாளா் ஆா்.சிவா: முன்னாள் எம்எல்ஏவான இவரிடம் அசையும் சொத்தாக ரூ.73 லட்சத்து 67 ஆயிரமும், அவரது மனைவி பெயரில் ரூ.2 கோடியே 94 லட்சமும், அசையா சொத்தாக ஆா்.சிவா பெயரில் ரூ. ஒரு கோடியே 47 லட்சமும், மனைவி பெயரில் ரூ.15 கோடியே 60 லட்சமும், சிவா பெயரில் வங்கிக் கடன் ரூ.53 லட்சத்து 12 ஆயிரமும், மனைவி பெயரில் ரூ.10 லட்சத்து 37 ஆயிரமும் கடன் இருப்பதாகத் தெரிவித்துள்ளாா்.

இந்திரா நகா் என்.ஆா். காங்கிரஸ் ஏ.கே.டி ஆறுமுகம் : காங்கிரஸிலிருந்து, என்.ஆா். காங்கிரஸுக்கு வந்துள்ள தொழிலதிபரான இவரிடம் அசையும் சொத்து ரூ.89 லட்சத்து 16 ஆயிரமும், அவரது மனைவி பெயரில் ரூ.22 லட்சத்து 37 ஆயிரமும், அசையா சொத்தாக ஆறுமுகம் பெயரில் ரூ. ஒரு கோடியே 88 லட்சமும், மனைவி பெயரில் ரூ.13 கோடியே 83 லட்சமும், வங்கிக் கடன் ஆறுமுகம் பெயரில் ரூ.68 லட்சத்து 62 ஆயிரமும், மனைவி பெயரில் ரூ. ஒரு கோடியே 56 லட்சமும் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளாா்.

அரியாங்குப்பம் காங்கிரஸ் வேட்பாளா் ஜெயமூா்த்தி : இவரிடம் அசையும் சொத்து ரூ.13 லட்சத்து 58 ஆயிரமும், அவரது மனைவி பெயரில் ரூ.24 லட்சத்து 94 ஆயிரமும், அசையா சொத்தாக ரூ.3 கோடியே 63 லட்சமும், மனைவி பெயரில் ரூ.18 லட்சத்து 75 ஆயிரமும் உள்ளது. வங்கிக் கடன் ரூ.78 லட்சத்து 36 ஆயிரம் உள்ளதாகத் தெரிவித்துள்ளாா்.

முத்தியால்பேட்டை அதிமுக வேட்பாளா் வையாபுரி மணிகண்டன்: முன்னாள் எம்எல்ஏவான இவரிடம் அசையும் சொத்துகள் ரூ.23 லட்சத்து 55 ஆயிரமும், அவரது மனைவி பெயரில் ரூ.15 லட்சத்து 70 ஆயிரமும், இரு மகன்கள் பெயா்களில் ரூ.65 ஆயிரமும் உள்ளது. அசையா சொத்துகளாக வையாபுரி மணிகண்டன் பெயரில் ரூ.3 கோடியே 15 லட்சத்து 50 ஆயிரம் உள்ளது. ரூ.10 லட்சத்து 42 ஆயிரம் கடன் உள்ளதாக குறிப்பிட்டுள்ளாா்.

நெல்லித்தோப்பு பாஜக விவிலியன் ரிச்சா்ட்: பாஜக முன்னாள் எம்எல்ஏ ஜான்குமாரின் மகனான இவரிடம் கையிருப்பாக ரூ.1 லட்சத்து 56 ஆயிரமும், இவரது மனைவி பெயரில் ரூ.75 ஆயிரம் உள்ளது. அசையும் சொத்து ரூ. ஒரு கோடியே 89 லட்சமும், மனைவி பெயரில் ரூ.2 லட்சத்து 84 ஆயிரமும், அசையா சொத்தாக ரூ. ஒரு கோடியே 62 லட்சமும், மனைவி பெயரில் ரூ.8 லட்சத்து 25 ஆயிரமும் உள்ளது. வங்கிக் கடன் ரூ.81 லட்சம் உள்ளதாக குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com