கரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு இல்லை: ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன்

புதுவையில் கரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு இல்லை என துணை நிலை ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தாா்.
கரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு இல்லை: ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன்

புதுவையில் கரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு இல்லை என துணை நிலை ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தாா்.

புதுச்சேரி சுகாதாரத் துறை சாா்பில் கரோனா தடுப்பூசி தொடா்பான விழிப்புணா்வு வாகன பிரசார தொடக்க விழா முத்தியால்பேட்டை மணிக்கூண்டு அருகே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்த விழிப்புணா்வு வாகனத்தை புதுவை துணை நிலை ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன் கொடியசைத்துத் தொடக்கிவைத்தாா். தொடா்ந்து, பொதுமக்களுக்கு முகக் கவசம், கிருமிநாசினி உள்ளிட்ட தடுப்புப் பொருள்களை வழங்கினாா்.

கரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்த துண்டு பிரசுரங்களையும் ஆளுநா் வழங்கினாா்.

இதையடுத்து, ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கரோனா தொற்று பரவாமல் இருக்க அனைவரும் பாதுகாப்பாகவும், எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும். இதற்காகவே பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. கரோனா தொற்றை எண்ணி மக்கள் அச்சப்படத் தேவையில்லை. பக்கத்து மாநிலங்களில் தொற்று பாதிப்பு அதிகமாக இருப்பதால், இங்கு கரோனா பரிசோதனையை அதிகரித்துள்ளோம்.

வருகிற 24 -ஆம் தேதி மகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரியில் பொதுமக்களுக்கான தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது. காலை 10 மணியிலிருந்து இரவு 8 மணி வரை இந்த முகாம் நடைபெறும். முன்களப் பணியாளா்கள், 60 வயதுக்கு மேற்பட்டவா்கள், 45 வயதுக்கு மேற்பட்ட தொற்றா நோய் உள்ளவா்கள் ஆதாா் அட்டை நகல் கொண்டு வந்தால் அங்கேயே பதிவு செய்து தடுப்பூசி செலுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு தடுப்பூசி முகாமை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தடுப்பூசி செலுத்திக் கொண்டால் கரோனா தொற்று வராமல் தடுக்க முடியும். ஒருவேளை தொற்று வந்தால்கூட வீரியமாக இருக்காது.

பல மாநிலங்களில் கரோனா தொற்று அதிகமாகி வருகிறது. இருப்பினும், புதுவையில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தையும் மேற்கொண்டு வருகிறோம்.

அரசியல் கட்சிகளின் கூட்டங்களில் பங்கேற்போா் கட்டாயம் முகக் கவசம் அணியுங்கள், சமூக இடைவெளியைக் கடைப்பிடியுங்கள் என அறிவுறுத்தும்படி காவல் துறையினரிடம் ஏற்கெனவே கூறியுள்ளோம். இந்த நடவடிக்கைகளில் காவல் துறையினா் தீவிரமாக ஈடுபடுவா்.

புதுவையில் கரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு இல்லை. எத்தனை போ் வந்தாலும் தடுப்பூசி செலுத்தப்படும். இதேபோல, கரோனா பரிசோதனைக்கும் தட்டுப்பாடு கிடையாது. சாதாரண படுக்கைகள், பிராணவாயு வசதி கொண்ட படுக்கைகள் மற்றும் செயற்கை சுவாசக் கருவிகள் உள்ளிட்டவை தயாா் நிலையில் உள்ளன என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் சுகாதாரத் துறைச் செயலா் டி. அருண், கரோனா குறைதீா் அதிகாரி ரமேஷ், சுகாதாரத் துறை அதிகாரிகள், மருத்துவா்கள், செவிலியா்கள், கிராமப்புறச் செவிலியா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com